காவல்துறை மரியாதையுடன் கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் தகனம் செய்யப்பட்டது.
புகழ்பெற்ற கவிஞரான ஈரோடு தமிழன்பன் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (நவ. 22) காலமானார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், பொதுமக்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள மின் இடுகாட்டில் இன்று (நவ.23) காலை அவரது இறுதிச் சடங்குகள் தொடங்கி நடைபெற்றன.
மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில் காவல்துறை மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
ஈரோடு தமிழன்பன்
'வணக்கம் வள்ளுவ' என்னும் புகழ்பெற்ற கவிதை நூலுக்காக இந்திய அரசின் 'சாகித்திய அகாதெமி' விருதை கவிஞர் ஈரோடு தமிழன்பன் பெற்றார். இருபதாம் நூற்றாண்டுக் கவிதை வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்திய 'வானம்பாடி' இதழின் பிரகடனக் கவிதையாக அவரது கவிதை இடம்பெற்றது.
இவர், சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியதுடன், தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளிலும் விளங்கினார். 'அரிமா நோக்கு' ஆய்விதழின் ஆசிரியராகவும் சேவையாற்றியவர்.
'தமிழன்பன் கவிதைகள்', 'தோணி வருகிறது', 'தீவுகள் கரையேறுகின்றன', 'அந்த நந்தனை எரிச்ச நெருப்பின் மிச்சம்', 'சூரியப் பிறைகள்', 'திரும்பி வந்த தேர்வலம்", 'பனி பெய்யும் பகல்', 'இரவுப் பாடகன்' முதலிய 90 க்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார்.
நம் காலத்தின் மகாகவி என்று போற்றப்படும் ஈரோடு தமிழன்பன், இந்திய அரசின் 'சாகித்திய அகாதெமி விருது', வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 'உலகத் தமிழ்ப்பீட விருது', செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கிய 'கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது', கனடா டொரண்டோ பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்த்தோட்டம் அமைப்பு இணைந்து வழங்கிய 'நாவலர் தகைசால் விருது' உள்ளிட்ட உலகளாவிய விருதுகளைப் பெற்ற தமிழின் முதுபெருங்கவிஞர்.
ஈரோட்டை அடுத்த சென்னிமலையில் 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி பிறந்தவர் ஈரோடு தமிழன்பன். இவரது இயற்பெயர் ந. செகதீசன் என்பதாகும்.
இலக்கியங்களைப் படைத்தவர். தலைசிறந்த கவிஞராகவும் தலைசிறந்த தமிழறிஞராகவும் தலைசிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கியவர்.
தந்தை பெரியாரின் கருத்தியலையும் மார்க்சியக் கருத்துகளையும் அடியொற்றித் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்ட ஈரோடு தமிழன்பன் தமது கவிதைகளையும் பெரியாரிய, மார்க்சிய நெறியை அடிநாதமாகக்கொண்டு படைத்தவராவார். தமிழ், தமிழர், தமிழினம் என்பதனை அடையாளமாகக் கொண்டு செயல்பட்ட பேராளுமையாவார்.
தமிழின் முன்னோடி இலக்கிய விமர்சகர்களான கலாநிதி க. கைலாசபதி, கலாநிதி கா. சிவத்தம்பி, ஞானி முதலியவர்களால் தமிழின் மிக முக்கியமான கவிஞர் எனவும், இருபதாம் நூற்றாண்டுக் கவிதை வரலாற்றில் பல முக்கியமான படைப்புகளைப் படைத்தவர் எனவும், புதுக்கவிதை வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியவர் எனவும், கவியரங்கக் கவிதை வடிவத்தில் புதிய முறையை உருவாக்கியவர் எனவும் மதிப்பிடப்பட்டுக் கொண்டாடப்பட்டவர் ஈரோடு தமிழன்பன்.
உலகளாவிய பார்வை கொண்ட கவிஞராகவும், உலக அளவில் மானுடத்திற்காகக் குரல் கொடுக்கும் கவிஞராகவும் ஈரோடு தமிழன்பன் திகழ்ந்தார். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் கவிஞராகிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனோடு மிக நெருக்கமாகப் பழகியவர். பாரதிதாசனால் இலக்கிய உலகில் அறிமுகம் செய்யப்பட்டவர். பாரதிதாசனால் வியந்து பாராட்டப்பட்டவர்.
இந்திய சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல உயரிய பொறுப்புகளை வகித்தவர். சென்னை, புதுக்கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய சிறந்த பேராசிரியராகவும் ஆயிரக்கணக்கான இளங்கவிஞர்களை உருவாக்கிய முன்னோடிக் கவிஞராகவும் திகழ்ந்தவர்.
ஆங்கிலம் உள்ளிட்ட உலக மொழிகள் பலவற்றிலும் கவிஞர் தமிழன்பனின் கவிதை நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றிலும், ஒட்டுமொத்தத் தமிழிலக்கிய வரலாற்றிலும் தனிச் சிறப்பான இடத்தைப் பெறும் மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களைச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறை 2002 ஆம் ஆண்டில் தேசியக் கருத்தரங்கம் நடத்திச் சிறப்பித்தது.
இதையும் படிக்க | கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.