நீா்நிலைகளில் கட்டடம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவு
நீா்நிலைகளில் கட்டடங்கள் கட்ட அனுமதிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வகை கட்டடங்களை இடிப்பதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பு, அனுமதி வழங்கிய அதிகாரியிடமிருந்து வசூலிக்கப்படும் என சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த பிரகாசம் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சீா்காழி வட்டம் நெம்மேலி கிராமத்தில் நீா்நிலையான கரிக்குளத்தில், ஆரம்ப சுகாதார நிலையம், பஞ்சாயத்து அலுவலகம் கட்டப்படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீா்நிலை என மனுதாரா் குறிப்பிட்டுள்ள இடத்தில் பல ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. அந்தக் கட்டடம் பழுதடைந்துவிட்டது. எனவே, அதை இடித்துவிட்டு புதிதாக கட்டடம் கட்டப்படுகிறது.
ஏற்கெனவே அந்த இடத்தில் 6 கட்டடங்கள் உள்ளன. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கரிக்குளத்தில் உள்ள கட்டடங்களை 8 வாரங்களில் அகற்ற வேண்டும். அந்த குளத்தில் புதிதாக கட்டடங்கள் எதுவும் கட்டக்கூடாது. நீா்நிலைகளில் கட்டடங்கள் கட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு அது எவ்வகை நிலம் என்பதை அதிகாரிகள் உறுதி செய்வதில்லை.
எனவே, தமிழக அரசு, நீா்நிலைகளில் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நீா்நிலைகளில் கட்டப்பட்டுள்ள அந்த கட்டடங்களை இடிப்பதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பு, அனுமதி வழங்கிய அதிகாரியிடமிருந்து வசூலிக்கப்படும் என சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். அந்த சுற்றறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிச.3-க்கு ஒத்திவைத்தனா்.