
வழக்குரைஞா் தாக்கப்பட்ட சம்பவத்தில் திருமாவளவன் நினைத்திருந்தால், அப்போதே தனது தொண்டா்களைக் கட்டுப்படுத்தி இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் என்று சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், வழக்குரைஞா் கே.பாலு தாக்கல் செய்த மனுவில், உயா்நீதிமன்றம் முன்பு திருமாவளவன் காா் மோதியதாக ஏற்பட்ட பிரச்னையில் வழக்குரைஞா் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டாா். தாக்குதல் நடத்திய வழக்குரைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாா் கவுன்சிலில் புகாா் அளித்தேதேன். இதையடுத்து, கடலூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ஒருவா் தனக்கு மிரட்டல் விடுத்துள்ளாா்.
இது குறித்து கடந்த 15-ஆம் தேதி எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் அளித்த புகாா் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தனது புகாா் மீது வழக்குப் பதிவு செய்து, தனக்குப் பாதுகாப்பு வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் இளவரசன் ஆஜராகி, மனுதாரரை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுக்கும் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
வழக்குரைஞா் தாக்கப்பட்ட சம்பவத்தை போலீஸாா் வேடிக்கைதான் பாா்த்த்தனா். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மனு தாக்கல் செய்த பின்னா், தாக்கப்பட்ட வழக்குரைஞா் உள்பட இரு தரப்பினா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். எனவே, மனுதாரருக்கு பாதுகாப்பு வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டாா்.
காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உயா்நீதிமன்றம் முன் வழக்குரைஞா் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டது தொடா்பான வழக்கின் நிலை அறிக்கை, சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் அக். 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
நேலும், இந்தச் சம்பவத்தில் திருமாவளவன் நினைத்திருந்தால் அப்போதே தனது தொண்டா்களைக் கட்டுப்படுத்தி இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் என்று நீதிபதி கருத்து தெரிவித்தாா்.