
சென்னை: தொடர் கனமழை காரணமாக வரத்துக் குறைந்து சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.50 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில்லறை விற்பனையில் ரூ.70 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் தக்காளி விலை அதிகரித்திருக்கும் அதே நாளில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தக்காளி வாங்கிச் செல்வோர் குறைந்ததால் விலை ரூ.10 ஆக சரிந்துள்ளது.
இதனால், அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து தக்காளியை ஆண்டிபட்டி சந்தைக்குக் கொண்டு வராமல் விவசாயிகள் சாலை மற்றும் குளங்களில் தக்காளியை கொட்டிச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது.
பல்வேறு மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை தாக்கம் காரணமாக தோட்ட பயிர்களான தக்காளி கேரட் உள்ளிட்டவைகள் வரத்து காய்கறி சந்தைகளுக்கு வெகுவாக குறைந்தது.
இந்நிலையை காஞ்சிபுரம் ராஜாஜி சந்தையில் நேற்று தக்காளி பத்து ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 30 மற்றும் 40 ரூபாய்களில் விற்கப்படுகிறது.
இதேபோல் ஒரு கிலோவிற்கு கேரட் 60 ரூபாய், அவரை 60 ரூபாய், முருங்கை 120 என விற்கப்படுகிறது. இதைத் தவிர மற்ற காய்கறி விலைகள் அனைத்தும் சற்று உயர்ந்துள்ளது. திடீரென தக்காளி விலை உயர்ந்துள்ளதால், சந்தைக்கு வரும் மக்கள், மேலும் விலை உயருமோ என்ற அச்சத்தில் அதிகப்படியான தக்காளியினை வாங்கிச் சென்று வருகின்றனர்.
இதையும் படிக்க.. தடயமே இல்லாமல் மறைந்து போன தாழ்வுப் பகுதி! இனி மழை இருக்காதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.