செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி!

தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் எம்பி கனிமொழி உரை...

News image

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி - SANSAD

Updated On :17 ஏப்ரல் 2026, 6:49 am

தொகுதி மறுவரையறை மசோதா பற்றி அமித் ஷா கூறுவதிலும், மசோதாவில் இருப்பதிலும் வேறுபாடு இருப்பதாக மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை திருத்த மசோதா உள்ளிட்டவை வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றன.

இந்த விவாதத்தில் வெள்ளிக்கிழமை கனிமொழி பேசியதாவது:

“மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2023 அமல்படுத்தப்பட்டதாக நேற்றிரவு 10 மணிக்கு அவசர அவசரமாக அரசிதழில் வெளியிட்டதற்கு என்ன அர்த்தம்? இவ்வளவு காலம் அமைதியாக இருந்துவிட்டு மக்களவையில் விவாதம் நடைபெற்ருக் கொண்டிருக்கும் வேளையில் அரசிதழில் வெளியிடுவதற்கான தேவை என்ன? அப்படியெனில் இந்த அவைக்கான மதிப்பு என்ன?

தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் திசைத்திருப்பும் வகையில் அவசர அவசரமாக நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை திமுக சார்பாகவும், தமிழ்நாடு சார்பாகவும் நான் எதிர்க்கிறேன்.

15 ஆண்டுகள் பழமையான 2011 மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய முயற்சிக்கிறீர்கள். 850 தொகுதிகளாக மாற்றப்பட்டால் பெரும்பாலான எம்பிக்களுக்கு மக்களவையில் பேசுவதற்குகூட நேரம் கிடைக்காது. தற்போது தமிழ்நாட்டின் குழந்தை பிறப்பு விகிதமானது 1.6 மட்டுமே. அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைவிட குறைவு. எங்கள் மாநிலத்தின் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. எங்கள் பெண்களுக்கு கல்வியறிவு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் சாதனையால் நாடு பெருமைக் கொள்ள வேண்டும்.

உத்தரப் பிரதேசத்தின் மக்கள்தொகை கடந்த 1971 ஆம் ஆண்டைக் காட்டிலும் 120 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மக்கள்தொகை வெறும் 15 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதாவில், கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மறுவரையறை செய்யப் போவதாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் ஒன்று சொல்கிறார், மசோதாவில் ஒன்று இருக்கிறது.

கடைசியாக 2011 இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில் உ.பி.க்கு 13 தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். தமிழ்நாடு 11 தொகுதிகளை இழக்க நேரிடும். ஆனால், நேற்று உள்துறை அமைச்சர் பேசும்போது, தமிழ்நாட்டுக்கு 50 சதவிகிதம் கூடுதல் தொகுதி கிடைக்கும். 39 தொகுதிகள் 59 ஆக அதிகரிக்கும் என்றார்.

தொகுதி மறுவரையறை ஆணையமானது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் மத்திய அரசு அமைக்கும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்பொருள் மாநில அரசுகளையோ, எதிர்க்கட்சிகளையோ, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடமோ ஆலோசிக்கத் தேவையில்லை என்பதாகும்.

அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவிகித உறுப்பினர்கள் அதிகரிப்பார்கள் என்று உள்துறை அமைச்சர் கூறுகிறார். அவர் கூறுவதை முழு அதிகாரம் கொண்ட தொகுதி மறுவரையறை ஆணையம் நிராகரித்தால் வழக்கம்போல் புல்டோசர் வைத்து ஆணையத்தை தகர்ப்பீர்களா? அல்லது தொகுதி மறுவரையறை ஆணையத்துக்கு எதிராக மத்திய அரசு வழக்கு தொடருமா? ஏனெனில், மசோதாவில் தொகுதி மறுவரையறை ஆணையம் உத்தரவிட்டால், அதனை எந்த நீதிமன்றத்தாலும் கேள்வி கேட்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்ற சிறப்பு அமர்வை நடத்துங்கள் எனக் கூறினோம். ஆனால், இரு வாரங்கள்கூட உங்களால் பொறுக்க முடியவில்லை. 2023 இல் இருந்து அமைத்தியாக இருந்த நீங்கள் தற்போது ஏன் இவ்வளவு அவசரம்?

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கிறோம். ஆனால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தொகுதி மறுவரையறை மசோதாவுடன் ஒன்றிணைத்து தாக்கல் செய்துள்ளது சதியாகும். ஆகையால், தொகுதி மறுவரையறையை எதிர்ப்பவர்களை மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களாக பாஜக சித்திரிக்கிறது. இந்தியப் பெண்களை மனித கவசமாக பாஜக பயன்படுத்துகிறது.

தொகுதி மறுவரையறை செய்யாமல் தற்போதைய உறுப்பினர்கள் எண்ணிக்கையில் இருந்து 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்தாமல் 2029 மக்களவைத் தேர்தலில் அமல்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Summary

What Amit Shah says is one thing; what is in the Bill is another! — Kanimozhi in the Lok Sabha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.