FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

வடலூரில் வள்ளலார் பன்னாட்டு மையத்திட்ட பணியைக் கைவிட வேண்டாம்: கே.எஸ். அழகிரி கோரிக்கை

வடலூரில் வள்ளலார் பன்னாட்டு மையத்திட்ட பணியைக் கைவிட வேண்டாம் என கே.எஸ். அழகிரி கோரிக்கை வைத்துள்ளது பற்றி...

News image

கே.எஸ். அழகிரி - கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:15 pm IST

வடலூரில் வள்ளலார் பன்னாட்டு மையத்திட்ட பணியைக் கைவிட வேண்டாம் என கே.எஸ். அழகிரி இன்று (ஆகஸ்ட் 1) கோரிக்கை வைத்துள்ளார்.

சிதம்பரம், வடலூரில் வள்ளலார் பன்னாட்டு மையத்திட்ட பணியைக் கைவிட வேண்டாம் என வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி தமிழக முதல்வருக்குக் கடிதம் அனுப்பி உள்ளார்.

கடித விவரம்:

வடலூர் நகரில் ஸ்ரீராமலிங்க சுவாமி திருக்கோவில் இருக்கிற இடத்தில் நடைபெற்று வந்த 'வள்ளலார் பன்னாட்டு' 'மையத்தின் பணிகளை தமிழக அரசு நிறுத்திக் கொள்வதாக உயர்நீதிமன்றத்தில் அரசு மனு தாக்கல் செய்திருப்பதாக கேள்விப்பட்டேன். ஒரு நல்ல பணி எதன் காரணமாக நிறுத்தப்பட்டது என்பது தெரியவில்லை. வள்ளலாருடைய ஆலயம் உலகம் முழுவதும் இருக்கிற அவர்களுடைய பக்தர்கள் அரசால் மேம்பாடு அடைந்து வருவதாக எண்ணுகிற நேரத்தில் அந்தப் பணி நிறுத்தப்பட்டு இருப்பது அருட்பெருஞ்ஜோதி பக்தர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. பன்னாண்டு காலமாக அந்த திருக்கோவிலுடைய தோற்றம் யாருடைய மனதையும் கவராத வகையிலும், மகிழ்விக்காத நிலையிலும் வெறிச்சோடி காணப்பட்டது. பார்ப்பதற்கு வறட்சியாகவும், யாரும் கவனிக்காத கைவிடப்பட்ட ஒரு வறண்ட நிலப்பரப்பாகவே அது காட்சியளித்தது. அதை சுற்றிலும் பசுமையான மரங்களோ, பாதுகாப்பான சுற்றுச்சூழலோ, ஏதும் இல்லாமல் ஆடு, மாடு மேய்க்கிற இடமாகவும், சிறுவர்கள் விளையாடுகிற இடமாகவும், இரவு நேரங்களில் மக்கள் ஒதுங்குகிற இடமாகவும் மட்டுமே காணப்பட்டது.இந்த நிலை மாறாதோ! இந்த இடமும் இல்லை நடராஜர் ஆலயத்தை போன்று அயோத்தி இராமர் கோவிலைப் போன்று, திருப்பதி வெங்கடேச பெருமாள் ஆலயத்தை போன்று, சிறப்புறாதா! என்று ஏங்கியவர்கள் பல்லாயிரம் பேர் உண்டு. இங்கு வந்து செல்கிற பக்தர்களுக்கு ஒதுங்குவதற்கு கூட ஒரு கழிப்பறை நல்ல முறையில் இல்லை. காலணி இல்லாமல் நடந்து செல்பவர்களுக்கு பாதையில் பரவி கிடக்கிற நெருஞ்சி முட்களும். கரடு முரடான கற்கள் சிதறி கிடப்பதும் தான் மிகுந்த துயரத்தை தரும்.

ரூ. 100 கோடியில் ஒரு பன்னாட்டு மையம் அமைகிறபோது, எவ்வளவோ மாற்றங்களும் சிறப்புகளும் அங்கே நிகழும் என்றுதான் எதிர்பார்த்தோம். முதியோர் இல்லமும் உணவு அருந்தும் கூடங்களும் வேறெங்காவது அமைக்கலாம் என்கிற அரசின் பரிந்துரையை படித்த பொழுது மனம் அதை ஏற்க மறுத்தது. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் பார்வைப்படுகிற இடத்தில்தான் முதியோர்களுக்கான இல்லமும், உணவு அருந்தும் இடமும் அமைய வேண்டுமே தவிர, எங்கோ ஓர் இடத்தில் அமையக்கூடாது.

முதல்வர் ஆகிய நீங்கள் சென்ற அரசு கொண்டு வந்த திட்டத்தை அதே இடத்தில் அமைத்து மேலும் சிறப்புகளையும் பெருமைகளையும் வசதிகளையும், உலகத்தரத்திலான ஓர் ஆன்மீக நூலகத்தையும் மேம்படுத்த முயற்சிப்பதுதான் ஏற்புடையதாக இருக்குமே ஒழிய ரூ. 100 கோடியிலான திட்டத்தை கைவிடுவது சிறப்பாக அமையாது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் இன்றைக்கு மத்திய மாநில அரசுகளால் பல நூறு கோடி ரூபாய்க்கு திட்டங்கள் தீட்டப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசிக்கும்படி மிக பிரம்மாண்டமாக உருமாற்றம் செய்யப் பட்டிருக்கிறது. ஆலயப் பணிகளில் அரசு தலையீடு என அங்கே எவரும் குரல் எழுப்பவில்லை.

அது ஓர் இறைபணி. அதே போல், அருட்பெருஞ்சோதி ஆலயமும் மாறுதல் பெறுதல் வேண்டும். வடலூர் கடலூராக மாற வேண்டும் என வள்ளலார் கனவு கண்டார். நீங்கள் அந்த கனவை மெய்ப்பிக்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அந்த திட்டத்தை கைவிட வேண்டாம்!

மேலும் மேம்படுத்த வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன் என அந்தக் கடிதத்தில் அழகிரி தெரிவித்துள்ளார்.

Summary

K.S. Alagiri urged today (August 1) that the Vallalar International Centre project in Vadalur not be abandoned.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.