நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புகுடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு
/

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!

முதல்வர் விஜய் உத்தரவின்படி, நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளதைப் பற்றி...

News image

முதல்வர் ஜோசப் விஜய் - (கோப்புப் படம்)

Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:17 pm IST

முதல்வர் விஜய் உத்தரவின்படி, நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் உத்தரவின்படி, நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். முதல்வருக்கு மனமார்ந்த நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் இதற்கு தொடர்புடைய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது தொடர்பாக தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர். மேலும், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். தமிழ்நாட்டிலும் ஆதரவு வலுத்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல், நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு, போராட்டத்தில் கலந்து கொண்டோர் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து என 3 கோரிக்கைகள் மத்திய அரசிடம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் வைத்திருந்தனர்.

போராட்டம் தொடங்கி 36 நாள்களுக்குப் பிறகு, ஜூலை 25 ஆம் தேதியில் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாட்டிலும் மாணவர்கள் மீது போடப்பட்டிருந்த வழக்குகளை ரத்துசெய்யக்கோரி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Summary

As per the orders of Chief Minister Vijay, the cases filed against students who protested against the NEET exam have been dropped.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.