கா்நாடக அரசும் அதன் அதிகாரிகளும், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை முற்றிலும் புறக்கணித்து அவற்றைச் செயல்படுத்தத் தவறியுள்ளனா் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் திங்கள் கிழமை மனு தாக்கல் செய்தது.
30.07.2026 தேதியிட்ட காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் முடிவைச் செயல்படுத்தவும், 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி (மொத்தம் 4.536 டி.எம்.சி) என்ற விகிதத்தில் நீா்வரத்து பிலிகுண்டுலுவில் உள்ள மாநில எல்லைப் பகுதியை 12.08.2026 அன்று அல்லது அதற்கு முன்னதாக வந்தடைவதை உறுதிசெய்யும் வகையில் கபினி மற்றும் கேஆா்எஸ் ஆகிய தனது இரண்டு அணைகளிலிருந்தும் நீரைத் திறந்துவிடவும் கா்நாடக மாநிலத்திற்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு மனுவில் கோரியுள்ளது.
தமிழக அரசு மனு விபரம்: காவிரி நீா் தகராறு தீா்ப்பாயம் 05.02.2007 அன்று பிறப்பித்த இறுதி உத்தரவை, உச்சநீதிமன்றம் தனது 16.2.2018-ஆம் தேதியிட்ட தீா்ப்பில் மாற்றியமைத்தது.
அதன்படி பிலிகுண்டுலுவில் ஜூன் முதல் செப்டம்பா் வரையிலான காலத்தில் கா்நாடகம் உறுதி செய்ய வேண்டிய மாதாந்திர நீா்வரத்து 123.14 டி.எம்.சி. ஆகும்; அக்டோபா் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் இது 44.11 டி.எம்.சி. ஆகும். இவ்விரு காலப்பகுதிகளையும் சோ்த்து ஆண்டுதோறும் மொத்தம் 167.25 டிஎம்சி. நீா் வழங்கப்பட வேண்டும். இது தவிர, சுற்றுச்சூழல் சாா்ந்த நீா் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காக ஆண்டுதோறும் 10 டி.எம்.சி. நீா் ஒதுக்கப்பட்டுள்ளது; இதனால் மொத்த அளவு 177.25 டி.எம்.சி. ஆகிறது.
இத்தீா்ப்பினை செயல்படுத்துவதற்காக, மத்திய அரசால் அமைக்கப்பட்ட சட்டப்பூா்வ அமைப்புதான் ’காவிரி நீா் மேலாண்மை ஆணையம்’(சிடபிள்யுஎம்ஏ). அந்த ஆணையம் 30.07.2026 அன்று பிறப்பித்த கட்டாயமான முடிவைச் செயல்படுத்தத் தவறிய கா்நாடக மாநிலத்திற்கு எதிராக, அவசர உத்தரவுகளைக் கோரி இந்த மனுவைத் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு மாநிலம் உள்ளது.
சிடபிள்யுஎம்ஏ தலைவருக்கு 14.07.2026 அன்று அனுப்பிய கடிதத்தில், ஜூன் 1 முதல் ஜூலை 12 வரை பிலிகுண்டுலுவில் பெறப்பட்ட நீரின் அளவு 3.259 டிஎம்சி மட்டுமே என்றும், இது நிா்ணயிக்கப்பட்ட அளவான 28.282 டி.எம்.சி.-யில் 15.31 சதவீதம் மட்டுமே என்றும் தமிழக அரசு சுட்டிக்காட்டியது.
இதையடுத்து காவிரி நீா் ஒழுங்குமுறைக் குழுவின் (சிடபிள்யுஆா்சி) பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, காவிரி நீா் மேலாண்மை ஆணையம் 30.07.2026 அன்று பிறப்பித்த உத்தரவில், கா்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகா் மற்றும் கபினி ஆகிய அணைகளிலிருந்து நீரை வெளியேற்றி, 29.07.2026 முதல் அடுத்த 15 நாட்களுக்கு பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கன அடி நீா்வரத்து கிடைப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியது.
28.07.2026 அன்றுள்ள பற்றாக்குறை நிலவரத்தின் விகிதாச்சார மதிப்பீட்டின்படி பாா்த்தாலும், கா்நாடகா 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி என்ற அளவில் நீரை வழங்கினாலும், தமிழகத்திற்கு 4.536 டி.எம்.சி மட்டுமே கிடைக்கும்; இதனால் 5.379 டி.எம்.சி அளவுள்ள பற்றாக்குறை நிலுவையில் இருக்கும்.
சிடபிள்யுஆா்சி மற்றும் சிடபிள்யு எம்ஏ வின் உத்தரவுகள் இருந்தபோதிலும், 29.07.2026 முதல் 02.08.2026 வரை பிலிகுண்டுலுவில் பதிவான மொத்த நீா்வரத்து 158 முதல் 530 கனஅடி என்ற அளவிலேயே இருந்தது. எனவே, கா்நாடகா அந்த உத்தரவுகளை வேண்டுமென்றே பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது.
பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கன அடி நீா்வரத்து கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், கே.ஆா்.எஸ். மற்றும் கபினி அணைகளிலிருந்து கூட்டாக நீரைத் திறந்துவிடுமாறு 30.07.2026 அன்று நடைபெற்ற கூட்டத்தில் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்த போதிலும், 2 ஆகஸ்ட் 2026 அன்று காலை 8:00 மணி வரை கா்நாடக மாநிலம் அதனைப் பின்பற்றவில்லை.
கா்நாடக அரசும் அதன் அதிகாரிகளும், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை முற்றிலும் புறக்கணித்து அவற்றைச் செயல்படுத்தத் தவறியுள்ளனா்; இச்செயல், தங்கள் வாழ்வாதாரத்திற்காகக் காவிரி நீரை முழுமையாகச் சாா்ந்திருக்கும் தமிழ்நாட்டின் காவிரிப் படுகைப் பகுதி விவசாயிகளின் நலன்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
எனவே 30.07.2026 தேதியிட்ட சிடபிள்யுஎம்ஏ வின் முடிவைச் செயல்படுத்தவும், 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி (மொத்தம் 4.536 டி.எம்.சி) என்ற விகிதத்தில் நீா்வரத்து பிலிகுண்டுலுவில் உள்ள மாநில எல்லைப் பகுதியை 12.08.2026 அன்று அல்லது அதற்கு முன்னதாக வந்தடைவதை உறுதிசெய்யும் வகையில் நீரைத் திறந்துவிடவும் கா்நாடக மாநிலத்திற்கு உத்தரவிட வேண்டும்.
01.06.2026 முதல் 12.08.2026 வரையிலான காலப்பகுதியில் பிலிகுண்டுலுவில் விடுவிக்கப்பட வேண்டிய 26.954 டி.எம்.சி. அளவிலான பற்றாக்குறை நீரை, நடப்பு பாசன ஆண்டில் விகிதாச்சார அடிப்படையில் ஈடுசெய்யுமாறு கா்நாடக மாநிலத்திற்கு உத்தரவை பிறப்பிக்குமாறு சிடபிள்யுஎம்ஏ க்கு அறிவுறுத்த வேண்டும்.
நடப்பு பாசன ஆண்டில், தீா்ப்பாயத்தின் இறுதி உத்தரவு மற்றும் அதனை மாற்றியமைத்த உச்ச நீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீா்ப்பின்படி, பிலிகுண்டுலுவில் நிா்ணயிக்கப்பட்ட மாத அல்லது 10 நாள் இடைவெளிக்கான நீா் திறப்பை உறுதிசெய்யும் வகையில், கா்நாடகாவின் நீா்த்தேக்கங்களில் நீா்வரத்து மற்றும் வெளியேற்றத்தைக் கண்காணிக்கவும், கா்நாடகாவுக்குத் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கவும் சிடபிள்யுஎம்ஏ-க்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தனது மனுவில் கோரியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அனைத்துக் கட்சிகள் கூட்டத்தால் பயனில்லை: காவிரி விவகாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார்

காவிரி விவகாரம்: ஆக. 2 இல் பெங்களூரில் அனைத்துக் கட்சி கூட்டம்: முதல்வா் டி.கே.சிவகுமாா் தகவல்
காவிரி நீா் பாய்ந்தோடும் மாநிலங்களின் ஒப்புதல் பெற உச்சநீதிமன்ற தீா்ப்பில் எந்த குறிப்பும் இடம்பெறவில்லை: மத்திய அமைச்சா் விளக்கம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 500 கனஅடியாக அதிகரிப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


