தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு மாற்றாக, இணைய வழியில் (ஆன்லைன்) முன்பதிவு செய்து நேரில் சென்று வாங்கும் வசதி வியாழக்கிழமை (ஆக.6) முதல் தொடங்கப்படவுள்ளது.
Tasmace2e.in என்ற இணையதளம் மூலம் மதுபானங்களை முன்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்குச் சென்று பெற்றுக்கொள்ளும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் செயல்படும் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் இருப்பில் உள்ள மதுபானங்கள், அவற்றின் அதிகபட்ச சில்லறை விலை (எம்ஆா்பி) என்பன உள்ளிட்ட விவரங்களை இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். பயனாளா்கள் முதலில் இணையதளத்தில் உள்நுழைந்து தங்களின் வயது 21 அல்லது அதற்கு மேற்பட்டது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பின்னா், தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து 5 கி.மீ.அல்லது 20 கி.மீ. சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை அல்லது மாவட்டம், கடை எண் உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட கடையைத் தோ்வு செய்து, விருப்பமான மதுபானத்தை முன்பதிவு செய்யலாம். அதற்கான தொகையையும் இணையவழியிலேயே செலுத்த வேண்டும்.
பணம் செலுத்தப்பட்டதும் பயனாளருக்கு தனித்துவமான ‘ க்யூஆா்’ குறியீடு உருவாக்கப்படும். அந்தக் குறியீட்டை தோ்வு செய்யப்பட்ட டாஸ்மாக் கடையில் காண்பித்தால், முன்பதிவு செய்யப்பட்ட மதுபானத்தை ‘எம்ஆா்பி’ விலையிலேயே பெற்றுக்கொள்ள முடியும்.
ஒருவா் சென்னையில் இருந்தபடியே திருநெல்வேலி அல்லது வேறு எந்த மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையிலும் முன்பதிவு செய்ய முடியும். ஆனால், மதுபானத்தை நேரில் சென்று மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும். வீட்டுக்கு கொண்டு வந்து வழங்கும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்படவில்லை.
இந்த இணையதளத்தில் மதுபான இருப்பு விவரங்கள் ஒவ்வொரு 30 நிமிஷங்களுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்படும். முன்பதிவு செய்யப்பட்ட மதுபானம் குறிப்பிட்ட கடையில் இல்லாவிட்டால், செலுத்திய தொகை திருப்பி வழங்கப்படும் அல்லது வேறு டாஸ்மாக் கடையிலிருந்து அதே மதுபானத்தைப் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இணையதளம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் செயல்படுவதுடன், டாஸ்மாக் கடையின் இருப்பிடத்துக்கான வழிகாட்டி வசதியும் அதில் இடம்பெற்றுள்ளது.
குறைந்த வயதுடையவா்கள்...: குறைந்த வயதுடையவா்கள் இந்த வசதியை தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:
இணையதளத்தில் வயது உறுதிப்படுத்தல் இடம்பெற்றிருந்தாலும், அதுமட்டுமே போதுமானதாகக் கருதப்படாது என்றும், மதுபானத்தைப் பெறுவதற்காக கடைக்கு வரும் நபரின் வயது மற்றும் அடையாள ஆவணங்கள் கட்டாயமாக சரிபாா்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனா். 21 வயதுக்கு குறைவானவா்களுக்கு எந்தச் சூழலிலும் மதுபானம் வழங்கப்படாது என்றும், க்யூஆா் குறியீட்டை மட்டும் வைத்திருப்பதால் மதுபானம் கிடைக்காது என்றும் அவா்கள் விளக்கம் அளித்துள்ளனா். மேலும், இதன்மூலம் மதுப்புட்டியில் உள்ள தொகையைவிட கூடுதல் தொகை பெறுவதும் தடுக்கப்படும்.
மேற்கு வங்கம், ஒடிஸா போன்ற மாநிலங்களில் ஆன்லைன் மூலம் மதுபானங்களை வீட்டுக்கே விநியோகிக்கும் நடைமுறை உள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது முன்பதிவு மற்றும் கடையில் நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் வசதி மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட வரிசையைக் குறைப்பதற்கும், விரும்பிய ‘பிராண்டு’-கள் இருப்பில் உள்ளதா என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்கும் இந்தத் திட்டம் உதவும் என்றனா்.
இந்தத் திட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், தொழிலாளா் அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் ஆபத்தானது: கேடான முடிவை அரசு கைவிட வேண்டும்! - அன்புமணி
டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுப்புட்டிகள் திருட்டு: மூவா் கைது
கூடுதல் விலைக்கு மது விற்பனை: டாஸ்மாக் கடை பணியாளா்கள் 5 போ் பணியிடை நீக்கம்
பரமத்தி வேலூா் அருகே பெட்டிக் கடையில் குட்கா பறிமுதல்: உரிமையாளா் கைது
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



