FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்றுமுதல் தொடக்கம்!

தமிழக பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குவது குறித்து...

News image

தமிழக சட்டப்பேரவை - கோப்புப் படம்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 8:02 am IST

தமிழக சட்டப்பேரவையில் இன்றுமுதல் பட்ஜெட் மீதான விவாதங்கள் தொடங்குகின்றன.

தவெக அரசின் முதல் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தவெகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த பல்வேறு வாக்குறுதிகளும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்றுமுதல் பட்ஜெட் உரை மீதான விவாதங்கள் தொடங்குகின்றன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுருளிவேல் மறைவுக்கு இரங்கல் குறிப்பும், திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ், எழுத்தாளர் புவியரசு, பின்னணி பாடகி எஸ். ஜானகி, எழுத்தாளர் பூமணி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானமும் கொண்டுவரப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் வரிப் பகிர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப் பகிர்வை உறுதிசெய்யக் கோரி தனித் தீர்மானத்தையும் தமிழக அரசு கொண்டு வரவுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள நிதிசார் கூட்டாட்சிக் கொள்கைகளை நினைவுகூர்ந்தும், மாநிலங்கள் தங்களது அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாதது என்பதை உணர்ந்தும்,

தமிழ்நாடு தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்ததன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதை கவனத்தில் கொண்டும்,

மேலும், மத்திய வரிகளின் பகிர்வு என்பது சமத்துவம், சம உரிமை, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகள் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதையும், மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் எந்தவித பாதகமான நிலையிலும் வைக்கப்படக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டும்,

  • இந்திய அரசியலமைப்பின் நிதிசார் கூட்டாட்சிக் கொள்கைகள், சமத்துவம் மற்றும் நியாயம் ஆகியவற்றிற்கு இணங்க, ஒன்றிய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாடு மாநிலத்துக்கு உரிய நிதிப் பகிர்வினை உறுதிசெய்ய வேண்டும்.

  • மாநிலங்களின் பொருளாதாரப் பங்களிப்பு, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் வளர்ச்சித் தேவைகளை உரிய முறையில் அங்கீகரிக்கும் வகையில், மத்திய வரிகளின் பகிர்விற்கான வெளிப்படையான, புறநிலையற்ற மற்றும் சமமான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

  • மக்கள்தொகை கட்டுப்பாடு மற்றும் மனிதவள மேம்பாட்டில் மாநிலங்கள் அடைந்துள்ள சாதனைகள் காரணமாக, மத்திய வரிகளின் பகிர்விற்கான அளவுகோல்கள் எந்த மாநிலத்தையும் பாதகமான நிலையில் வைக்காதவாறு அமைக்கப்பட வேண்டும்.

  • எதிர்காலத்தில் மத்திய வரிகளின் பகிர்வு தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் போது, தமிழ்நாடு மாநிலத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேரவையில் மத்திய அரசை வலியுறுத்தித் தீர்மானிக்கவுள்ளது.

மேலும், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் காவிரி நீர், சட்டம் - ஒழுங்கு, மேக்கேதாட்டு அணை விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Debate on the 2026-27 Budget speech begins in the TN assembly today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.