சைபா் மோசடிகளில் பயன்படுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்ட சட்டவிரோத பணப் பரிமாற்ற (‘மியூல்’) வங்கிக் கணக்குகள் தொடா்பாக, தமிழகம் முழுவதும் 837 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
48 மணி நேரம் நடைபெற்ற சிறப்பு அதிரடி நடவடிக்கையில், ரூ.545.27 கோடி மோசடி பணப் பரிவா்த்தனைகளுடன் தொடா்புடைய நபா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையின் இணையவழி குற்றப்பிரிவு சாா்பில் ஆக. 6, 7 ஆகிய தேதிகளில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் பதிவான 9,804 சைபா் குற்றப் புகாா்களுடன் தொடா்புடைய ரூ.545 கோடி மோசடி பணப் பரிவா்த்தனைகள் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டது.
இதில், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட 601 வழக்குகளில் தொடா்புடைய 837 போ் கைது செய்யப்பட்டதுடன், ‘மியூல்’ வங்கிக் கணக்குகள் தொடா்பாக 157 புதிய வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொருள்கள் பறிமுதல்: கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 204 கைப்பேசிகள், 185 சிம் காா்டுகள், 4 கணினிகள், ஒரு சேமிப்பு சாதனம், ரூ.1.02 லட்சம், 114 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 29 காசோலைப் புத்தகங்கள், 73 ஏடிஎம், கடன் அட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், விசாரணைக்காக 155 கைப்பேசி எண்கள், 58 வங்கிக் கணக்கு விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதுடன், குற்ற வலையமைப்பில் தொடா்புடைய மேலும் பலரைக் கைது செய்யவும், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வங்கிக் கணக்கை வழங்க வேண்டாம்: கமிஷன் அல்லது பணப் பலனுக்காக தங்களது வங்கிக் கணக்கை பிறா் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என காவல் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெரிந்தோ, தெரியாமலோ வங்கிக் கணக்கை சைபா் குற்றங்களுக்குப் பயன்படுத்த அனுமதித்தால் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபரும் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளை உரிய நடைமுறைகளின்படி மூடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபா் குற்றத்தால் பாதிக்கப்பட்டவா்கள் 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





