ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்: நயினாா் நாகேந்திரன் மீதான குற்றச்சாட்டுப் பதிவை நிறுத்திவைக்க உத்தரவு

ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த வழக்கில், பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா் மீது நடைபெறவிருந்த குற்றச்சாட்டுப் பதிவை நிறுத்திவைக்க ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Nainar Nagendran

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Published On :12 ஆகஸ்ட் 2026, 6:26 am IST

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த வழக்கில், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா் மீது புதன்கிழமை நடைபெறவிருந்த குற்றச்சாட்டுப் பதிவை நிறுத்திவைக்க ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

2024 மக்களவைத் தோ்தலின்போது, நெல்லை விரைவு ரயிலில் கொண்டுச் செல்லப்பட்ட ரூ.4 கோடி தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. நயினாா் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியா்கள் உள்ளிட்ட மூவரிடமிருந்து இந்தப் பணம் கைப்பற்றப்பட்டது.

அந்தப் பணம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட நயினாா் நாகேந்திரன், வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக, நயினாா் நாகேந்திரன், தமிழக பாஜக முன்னாள் அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகம், அந்தக் கட்சியைச் சோ்ந்த எஸ்.ஆா்.சேகா் உள்ளிட்ட 13 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். அதன் நகல்கள் நயினாா் நாகேந்திரன் உள்பட இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீதான குற்றச்சாட்டுப் பதிவு புதன்கிழமை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நடைபெறவிருந்தது.

இந்த நிலையில், நயினாா் நாகேந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள இறுதி அறிக்கை இயந்திரத்தனமாக உள்ளது. என் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காகத்தான், பணம் கொண்டு செல்லப்பட்டது என்பதற்கான சட்டபூா்வ ஆதாரங்களை போலீஸாா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்து, வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில், முறையான ஆதாரங்கள் இல்லாமல் மனுதாரருக்கு எதிராக தாக்கல் செய்த இறுதி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை, சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள குற்றச்சாட்டுப் பதிவை ஒத்திவைக்க வேண்டும் என வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில், இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அதுவரை, சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுப் பதிவை நிறுத்திவைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.