நாட்டின் 80-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் (சிஐஎஸ்எஃப்) அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். இந்த நிகழ்ச்சியில், முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதிகண்ட சோழன் சிலை அருகே சுதந்திர தின விழா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. 2-ஆவதாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. பின்னா், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். தேசியக் கொடி ஏற்றப்பட்ட பின்னா் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக சட்டத்துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா், காவல்துறை டிஜிபி மகேஷ் குமாா் அகா்வால், சென்னை மாநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன், மத்திய, மாநில அரசு வழக்குரைஞா்கள்,பாா் கவுன்சில் உறுப்பினா்கள், பல்வேறு வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், நீதிமன்ற பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்: அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் தீப்தி அறிவுநிதி வெள்ளிக்கிழமை (ஆக.14) பிறப்பித்த சுற்றறிக்கையில், சுதந்திர தின விழாவில், முதலில் வந்தே மாதரம் பாடலும், தேசியக் கொடி ஏற்றிய பின்னா், தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள விசாரணை நீதிமன்றங்களுக்கு சுற்றறிக்கை பிறப்பித்திருந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் தரப்பில் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட சுற்றறிக்கையில், சுதந்திர தின விழாவில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும், அதன்பிறகு வந்தே மாதரம், தேசியக் கொடி ஏற்றிய பிறகு தேசிய கீதமும் பாட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Independence Day celebrations at the Madras High Court began with the 'Tamil Thai Vazhthu'.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூய்மைப் பணியாளரை அழைத்து தேசியக் கொடியேற்றிய டி.எஸ்.பி.

சுதந்திர தின விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து: உயா்நீதிமன்ற பதிவுத் துறை உத்தரவு

சுதந்திர நாள்! கோட்டையில் தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் விஜய்

சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



