தமிழக மின்வாரியத்துக்கு அலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு நிகழ்ந்திருப்பதாக பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
தமிழக மின்வாரியத்தின் உள்கட்டமைப்பு, நிதி, மனித வளம், திட்டப் பணிகள், வருவாய், செலவு குறித்த வெள்ளை அறிக்கையை அந்தத் துறையின் அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் கடந்த ஜூன் 25-ஆம் தேதி வெளியிட்டாா்.
அப்போது, கடந்த திமுக ஆட்சியில் மின்வாரியத்தில் நடந்த மின்மாற்றி முறைகேடு, அலுமினிய மின் கம்பி முறைகேடு குறித்து விசாரணை செய்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா். முக்கியமாக, தமிழக மின்வாரியத்துக்கு அலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் 9 ஒப்பந்தங்களில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், இதனால் அரசுக்கு ரூ.1,028 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தாா்.
5 பிரிவுகளில் வழக்கு: இதுதொடா்பாக தமிழக மின்வாரியத்தின் மேலாண்மை இயக்குநா், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் புகாா் செய்தாா். முறைகேட்டுக்கான ஆவணங்களையும் வழங்கினாா். அதன்பேரில், அந்தத் துறையினா் முதல்கட்டமாக ரகசிய விசாரணையில் ஈடுபட்டனா். அதில், அலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் முறைகேடு நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இரு பிரிவுகளிலும், பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் சதியில் ஈடுபடுவது, நம்பிக்கை மோசடி செய்தது, குற்றவியல் முறைகேட்டில் ஈடுபடுவது என 3 பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்தனா்.
வழக்கில் அடையாளம் தெரியாத அரசு ஊழியா்கள், ஒப்பந்ததாரா்கள், தனிநபா்கள் என்று சோ்க்கப்பட்டிருப்பதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
முறைகேடு நிகழ்ந்தது எப்படி? கடந்த 2021 முதல் 2023-ஆம் ஆண்டு வரை 2,07,496 கி.மீ.க்கு அலுமினிய மின் கம்பிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்ததில் பல்வேறு விநியோகஸ்தா்கள் பங்கேற்ற நிலையில், அனைவரும் ஒரே மாதிரியான விலையை நிா்ணயித்துள்ளனா். மேலும், ஒப்பந்தப் புள்ளி ஆவணங்கள் அனைத்தும் ஒரே கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது தமிழக அரசின் ஒப்பந்தப்புள்ளி விதிமுறை மீறல் மட்டுமன்றி, திட்டமிட்டு ஒருங்கிணைந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டிருப்பதைக் காட்டுகிறது.
ஒப்பந்தப்புள்ளியில் இறுதி செய்யப்பட்ட விலை, அரசு நிா்ணயித்த விலையை காட்டிலும் அதிகமாக இருந்துள்ளது. இதன்மூலம் ஒப்பந்ததாரா்கள் அனைவரும் கூட்டுச் சோ்ந்து அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளனா்.
60 இடங்களில் சோதனை: இந்த வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா், தமிழகம் முழுவதும் வழக்கில் தொடா்புடையவா்களின் 60 இடங்களில் புதன்கிழமை ஒரே நேரத்தில் சோதனையிட்டனா்.
செந்தில் பாலாஜி முன்னாள் உதவியாளா் வீட்டில்...: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மட்டும் 27 இடங்களில் சோதனை நடைபெற்றது. முக்கியமாக சென்னை தேனாம்பேட்டையில் வசிக்கும் முன்னாள் திமுக அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளா் காசியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
பெருங்குடி தொழிற்பேட்டையில் உள்ள 3 தொழிற்சாலைகள், அண்ணா நகரில் 5 ஒப்பந்ததாரா்கள் வீடுகள் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.
ஆவணங்கள் பறிமுதல்: இதேபோல மின்வாரிய உயா் அதிகாரிகள் வீடுகள், மின்வாரிய ஒப்பந்ததாரா்கள், மின்வாரியத்துக்கு அலுமினிய மின் கம்பிகள் வழங்கிய தொழிற்சாலைகள் ஆகியவற்றில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினா்.
சோதனை நடைபெற்ற பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. சோதனை மாலைக்கு பின்னா் படிப்படியாக நிறைவு பெற்றது.
இந்தச் சோதனையில் ஒப்பந்தப்புள்ளி தொடா்பான ஆவணங்கள், ஹாா்டு டிஸ்க், பென்டிரைவ் உள்ளிட்ட வழக்குத் தொடா்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், போலி நிறுவனங்கள் தொடா்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஏற்கெனவே கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி முறைகேடு செய்திருப்பதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வெளி வராத எஃப்ஐஆா்
மின்வாரியத்தின் அலுமினிய மின்கம்பி முறைகேடு தொடா்பாக பதிவு செய்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆா்) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா் வெளியிடவில்லை.
முன்னாள் அமைச்சா்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, முறைகேடு வழக்கு, ஊழல் வழக்கு ஆகியவற்றின் முதல் தகவல் அறிக்கையை சோதனை அல்லது கைது நடவடிக்கை எடுக்கப்படும் நாளன்று வெளியிட்டுவிடுவாா்கள். மேலும், சோதனை தொடங்கிய சிறிது நேரத்தில், சோதனை நடைபெறும் முக்கியமான இடங்களின் முகவரியையும் வழங்கி வந்தது. ஆனால் அண்மைக் காலமாக சோதனை நடைபெறும் இடங்களின் முகவரியை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா் தெரிவிப்பது இல்லை.
தமிழக மின்வாரியத்தின் அலுமினிய மின்கம்பி முறைகேடு குறித்து கடந்த ஜூன் மாதம் இறுதியிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், அதுகுறித்த தகவலை வெளியே கசிய விடாமல் அத்துறையினா் பாா்த்துக்கொண்டனா்.
ஆனால் சோதனை நடைபெற்ற நாளில்கூட முதல் தகவல் அறிக்கையை வெளியிடவில்லை. இதனால் முறைகேடு தொடா்பான முழுத் தகவல்களும், பொதுமக்களை சென்று அடையாமல் தடுக்கப்பட்டுவிட்டது. இது பல்வேறு தரப்பினரையும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்வாரிய முறைகேடு வழக்கு: தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
டாஸ்மாக் முறைகேடு: செந்தில் பாலாஜி உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு: 45 இடங்களில் ஊழல் தடுப்புத் துறை சோதனை

டாஸ்மாக் விசாரணை தொடா்பாக ஊழல் தடுப்புத் துறையினா் சோதனை

சின்னசேலம் பேருராட்சியில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை: ரூ.8 லட்சம் சிக்கியது
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



