
செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது: ஆதவ் அர்ஜுனா
செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - படம்: விடியோ கிளிப்
தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுப் பணித்துறை குறித்து பேரவை உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது என்று பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை ஒரு நாள் விடுமுறைக்குப் பின் இன்று கூடியது.
அப்போது பேசிய பேரவை உறுப்பினர் மாரிமுத்து, திருத்துறைப்பூண்டியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, எனவே ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பது குறித்து துறை ரீதியான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
அங்கு மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே கிராசிங் உள்ள சில இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் இல்லை. எனவே, முதலில் செய்ய வேண்டிய பணிகளாக ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
பல ரயில்வே கிராசிங் பகுதிகளில் ஒரு மணி நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் இந்த பிரச்னை உள்ளது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
முதல் பணியாக ரயில்வே மேம்பாலங்கள் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு வரப்படும். அதுபோல ரிங் ரோடு பிரச்னை உள்ளது. அதுவும் விரைவில் சரி செய்யப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் எடப்பாடி பழனிசாமி, சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. எனவே, தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை உயர்நிலை மேம்பாலம் அமைக்குப் பணிகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒப்புதல் பெறப்பட்டு தொடங்கவிருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்த்தால் கிடப்பில் போடப்பட்டதாக கூறினார். கிடப்பில் போடப்பட்ட உயர்நிலைப் பாலப் பணியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை எட்டுவழிச் சாலையாக மாற்றும் அறிவிப்பை பேரவையில் வெளியிட்டிருக்கிறோம்.
மத்திய அமைச்சருடன் சந்திப்பின்போதும் இது குறித்து வலியுறுத்தியிருக்கிறோம்.
சென்னை - கன்னியாகுமரி வரை எட்டு வழிச் சாலையாக மாற்றுவதுதான், அடுத்த 30 வருடத்துக்கான போக்குவரத்து பிரச்னைக்கான தீர்வாக இருக்கும். சென்னை நோக்கி வரும்போது, திருச்சி - செங்கல்பட்டு வர 4 மணி நேரம் ஆகும். ஆனால், அதே செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது.
அதுபோலவே பெங்களூரிலிருந்து திருவள்ளுர் 3 மணி நேரம் வந்துவிடுவோம், ஆனால் திருவள்ளூரிலிருந்து சென்னைக்குள் வர 3 மணி நேரம் ஆகிறது. மகாபலிபுரத்திலிருந்தும் சென்னை வர மூன்று மணி நேரம் ஆகிறது. எனவே, சென்னையை சுற்றியுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும். இது குறித்து மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும் என்றார்.
Summary
It takes 3 hours to travel from Chengalpattu to Chennai: Aadhav Arjuna
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




