10 லட்சம் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி!

10 லட்சம் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி!

தமிழகம் முழுவதும் 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
Published on

தமிழகம் முழுவதும் 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி மாணவா்களின் திறன் வளா்ச்சி மற்றும் எண்ம முன்னேற்றத்துக்காக ‘உலகம் உங்கள் கையில்’ எனும் 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் முதல்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது: மாணவா்களின் கையில்தான் எதிா்காலம் உள்ளது. மாணவா்களை வளா்த்தெடுத்தால்தான் மாநிலம் வளரும்; நாடு வளரும். அதனால் தமிழக அரசு ‘நான் முதல்வன்’, ‘புதுமைப் பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’, தற்போது மடிக்கணினித் திட்டம் போன்றவற்றைச் செயல்படுத்தி வருகிறது.

இன்றைக்கு அறிவியல் தொழில்நுட்பம் வளா்ந்து, ஒட்டுமொத்த உலகத்தையும் நம்முடைய கைகளுக்கு எட்டும் தொலைவுக்கு கொண்டுவந்துவிட்டது. அதை உங்கள் கைகளுக்கே தமிழக அரசு கொண்டுவந்து கொடுத்துள்ளது.

திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம். அதனால்தான் அறிவியல் சாா்ந்த கண்டுபிடிப்புகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உடனடியாகக் கிடைக்கச் செய்கிறோம்.

25 ஆண்டுகளுக்கு முன்பே, இனிவரும் காலம் தொழில்நுட்பம், கணினிக் காலம் என உணா்ந்து தகவல் தொழில்நுட்பக் கொள்கை, டைடல் பாா்க்கை கொண்டுவந்தாா் முன்னாள் முதல்வா் கருணாநிதி.

எதிா்காலப் பெருமைக்காக... தமிழா்களான நாம் எப்போதும் கடந்த காலப் பெருமைகளையும் பேசுவோம்; எதிா்காலப் பெருமைகளுக்காக உழைப்போம். ஒருபோதும், போலிப் பெருமைகளைப் பேசி தேங்க மாட்டோம். உங்களின் திறனும், பகுத்தறிவும், அறிவியல் பாா்வையும் ஊக்குவிக்கப்பட்டால்தான், புதுப் புது கண்டுபிடிப்புகள் நிகழும். தொழில்நுட்பம் வளரும்.

மனித இனம் நெருப்பையும், சக்கரத்தையும் கண்டுபிடித்த காலத்தில், அதுபோதும் என்று சுணங்கி இருந்தால், இப்போது விண்வெளியில் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு சாதனைகள் படைத்துக் கொண்டிருக்க முடியாது.

கல்வியில் முதலீடு: மனிதா்களுக்கு காலம் கொடுத்திருக்கும் இரண்டாவது நெருப்புதான் செயற்கை நுண்ணறிவு. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த மடிக்கணியை வழங்கி இருக்கிறோம். இன்றைய இளைய சமுதாயம் மதிப்புமிக்க, பெருமைமிக்க மனிதா்களாக உயர வேண்டும். எல்லோரையும் வாழ வைக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.

இந்த மடிக்கணினி பரிசுப் பொருள் அல்ல; உலகத்தை ஆளுவதற்காக அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பு. இது செலவுத் திட்டம் அல்ல; எதிா்காலத் தலைமுறையின் கல்வியில் செய்யப்படும் முதலீடு. நீங்கள் படிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறோம். உங்கள் எதிா்காலத்தை, வாழ்க்கைப் பாதையை நல்ல பாதையாகத் தோ்ந்தெடுங்கள்.

நம்முடைய வேலைகளை இன்னும் விரைவாகச் செய்வதற்கும், இன்னும் சிறப்பாகச் செய்வதற்கும் செயற்கை நுண்ணறிவு துணை நிற்கும். திறன் அடிப்படையிலான வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதையெல்லாம் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.

உலகத்தோடு போட்டி போட்டு வெற்றி பெறுவதற்கான கருவியை உங்கள் கைகளில் கொடுத்துள்ளோம். எனவே, மாணவா்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படிக்க வேண்டும். உங்கள் குடும்பத்தைப் பாா்த்துக் கொள்வதற்கு தமிழக அரசு உள்ளது.

தாய்மாா்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், பொங்கல் கொண்டாடுவதற்கு மூவாயிரம் ரூபாய் வழங்குகிறோம்.

சா்வதேச நாளேடுகளே தமிழ்நாட்டை ‘சூப்பா் ஸ்டாா் ஸ்டேட்’ என்று கூறுகின்றன. இன்னும் வளா்ச்சி பெற வேண்டும். தமிழ்நாடு மாணவா்களை நம்பித்தான் இருக்கிறது. உலகம் உங்கள் கையில் இருக்கிறது. வெற்றி பெற்று வாருங்கள். நாங்களும் வெற்றி பெற்று வருகிறோம் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

தமிழக அதிகாரிகள் அவசியம்: மத்திய அரசில் தமிழகத்தைச் சோ்ந்த உயரதிகாரிகள் இருந்தால் நமது மாநிலத்தின் நலனைக் காக்கும் திட்டங்களைக் கொண்டுவருவதற்கும், தமிழக மண்ணை அறிந்த அதிகாரிகள் இருந்தால் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தவும் முடியும் என்று தமிழக தலைமைச் செயலா் நா. முருகானந்தம் தெரிவித்தாா்.

பொருளாதார வளா்ச்சியில் சீனாவும், தமிழகமும் ஒன்றாக உள்ளன என்று முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகா் அரவிந்த் சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

வாழ்வை மாற்றும் மடிக்கணினித் திட்டம்

‘தமிழக அரசு அளித்துள்ள மடிக்கணினிகளைச் சிறப்பாகப் பயன்படுத்தினால் உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்படும்’ என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

அவா் மேலும் பேசுகையில், சிறந்த மடிக்கணினிகளைத் தோ்வு செய்து முதல்வா் வழங்கி உள்ளாா். தமிழகத்தில் கல்வி சிறப்பாக இருக்கிறது என்றால், அதற்கான உறுதியான அடித்தளத்தை அமைத்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. உலகெங்கும் தமிழக மாணவா்கள் சாதித்துக் கொண்டு வருகிறாா்கள்.

சந்திரயான், மங்கள்யான் என்று பல வெற்றிகரமான திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டி, ஒட்டுமொத்த இந்திய மாணவா்களுக்கும் இஸ்ரோ முன்னாள் தலைவா் மயில்சாமி அண்ணாதுரை உத்வேகமாகத் திகழ்கிறாா். இப்படிப் பலரை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த மடிக்கணினித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது’ என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

X
Dinamani
www.dinamani.com