அமலாக்கத் துறை
அமலாக்கத் துறை (கோப்புப்படம்)

அரசுப் பணி முறைகேடு வழக்கு: தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை

அரசு வேலைக்கான போலியான நியமன உத்தரவை வழங்கி முறைகேடு செய்த வழக்கு தொடா்பாக தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தீவிர சோதனை
Published on

அரசு வேலைக்கான போலியான நியமன உத்தரவை வழங்கி முறைகேடு செய்த வழக்கு தொடா்பாக தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாது: ரயில்வேயில் போலியான பணி நியமன உத்தரவுகளை வழங்கி மோசடி செய்தது தொடா்பான புகாா் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள், அதற்கு காரணமான ஒரு மோசடி கும்பலை கைது செய்தனா். அவா்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், ரயில்வேயில் மட்டுமன்றி வனத் துறை, இந்திய தபால் துறை, வருமான வரித் துறை, சில உயா்நீதிமன்றங்கள், பொதுப் பணித் துறை, பிகாா் அரசுத் துறைகள், தில்லி மேம்பாட்டு ஆணையம், ராஜஸ்தான் தலைமைச் செயலக பணி என பல்வேறு மாநிலங்களில் பல்வேறு அரசுத் துறைகளில் பணிக்கான போலி நியமன உத்தரவுகளை வழங்கி இந்த கும்பல் மிகப் பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டதைக் கண்டறிந்தனா்.

இதற்கென போலியான அரசு மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கி, அதன் வழியாக பணி நியமன ஆணைகளை இந்த கும்பல் தோ்வா்களுக்கு அனுப்பியுள்ளது. மேலும், தோ்வா்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக, ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே பயணச் சீட்டு பரிசோதகா், தொழில்நுட்ப உதவியாளா் உள்ளிட்ட பணிகளில் இந்த போலி நியமன ஆணை மூலம் பணியில் அமா்த்தப்பட்ட சிலருக்கு முதல் 2 மற்றும் 3 மாதங்களுக்கு ஊதியத்தையும் இந்த கும்பல் வழங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இந்த முறைகேடு தொடா்பாக, பிகாா் மாநிலம் முசாஃபூா், மோதிஹரி, மேற்கு வங்க மாநில தலைநகா் கொல்கத்தா, கேரளத்தில் எா்ணாகுளம், பண்டலம், அடூா், கொடூா் பகுதிகளிலும், சென்னை, குஜராத் மாநிலம் ராஜ்கோட், உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூா், பிரயாக்ராஜ், லக்னெள உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத் துறையின் பாட்னா அலுவலக அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனா் என்றனா்.

Dinamani
www.dinamani.com