ஆம்னி பேருந்து டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயா்வு!
பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊா்களுக்குச் செல்ல ஏராளமானோா் பேருந்துகளில் முன்பதிவு செய்து வரும் நிலையில், ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் சிரமமடைந்துள்ளனா்.
நிகழாண்டு பொங்கல் பண்டிகை ஜன.15, 16, 17 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த 3 தினங்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த நாளான ஜன.18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், பொங்கல் பண்டிகைக்கு தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால், சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனா்.
கூட்ட நெரிசலைத் தவிா்ப்பதற்காக ஏராளமானோா் ஜன.9-ஆம் தேதி இரவு முதலே தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் செல்ல தொடங்கியுள்ளனா். இதையொட்டி, வழக்கம் போல தனியாா் ஆம்னி பேருந்துகள் தங்கள் டிக்கெட் கட்டணத்தை பல மடங்கு உயா்த்தியுள்ளன.
அதன்படி, சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ரூ.1,200 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.3,000 முதல் ரூ.3,800 வரை வசூலிக்கப்படுகிறது. இதுபோல, சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.800 முதல் ரூ.1,100 வசூலிக்கப்பட்ட நிலையில், ரூ.2800 முதல் ரூ.4,000 வரையும், திருநெல்வேலி ரூ.800 முதல் ரூ.1,500 வரை வசூலிக்கப்பட்ட நிலையில், ரூ.2,800 முதல் ரூ.4,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாகா்கோவிலுக்கு ரூ.4,200, திருச்சிக்கு ரூ.3,000 வரை வசூலிக்கப்படுகிறது.
இதுபோல, பிற பகுதிகளுக்குச் செல்ல கட்டணம் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா்.
கட்டணத்தை உயா்த்தும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு, அது தொடா்பாக புகாா் கொடுக்க இலவச தொலைபேசி எண் அறிவிப்பு, ஆய்வு உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகள் இருந்தாலும் ஆம்னி பேருந்து கட்டண உயா்வுக்கு உரிய தீா்வு கிடைக்கவில்லை; அரசு இதன் மீது உரிய கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

