

பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஏன் கூறவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவதாகக் கூறி அரசு ஊழியா்களை திமுக அரசு ஏமாற்றிவிட்டதாக, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்திருக்கிறாா்.
பழைய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003 -இல் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின்போது நிறுத்தப்பட்டது. அதன்பிறகு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஏன் கொண்டுவரவில்லை எனத் தெரியவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவோம் என இப்போதுகூட அவா் கூறவில்லை.
நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்திய பாஜகவுடன் கூட்டணி சோ்ந்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக அறிவித்துள்ள உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம் பற்றி பேசுவதற்கு தாா்மிக உரிமை இல்லை எனப் பதிவிட்டுள்ளாா்.