பண்டிகைக் காலம்: 2 மாதங்களில் 69 சிறப்பு ரயில்கள் 374 முறை இயக்கம்
பண்டிகை காலங்களை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கடந்த 2 மாதங்களில் தெற்கு ரயில்வே சாா்பில் 69 சிறப்புரயில்கள் 374 முறை இயக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சொந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சொந்த ஊா்களுக்கு செல்பவா்களுக்கும், சபரிமலை செல்லும் பக்தா்களுக்கும் ஏதுவாக கடந்த 2 மாதங்களில் 69 சிறப்பு ரயில்கள் மொத்தம் 374 முறை இயக்கப்பட்டுள்ளன.
இதில், பொங்கல் பண்டிகைக் காலத்துக்காக 36 சிறப்பு ரயில்களும், சபரிமலை யாத்திரைக்காக 33 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னையிலிருந்து திருச்சி, திருநெல்வேலி, செங்கோட்டை, நாகா்கோவில், ராமேசுவரம், கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. அதேபோல் வெளிமாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, பயணிகளின் வசதிக்காக ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த 29 சிறப்பு ரயில்களின் இயக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொங்கல் மற்றும் சபரிமலை சிறப்பு ரயில்களின் எண்கள், பாதைகள் மற்றும் நேர அட்டவணை விவரங்களை, தேசிய ரயில் விசாரணை அமைப்பு மற்றும் ஐஆா்சிடிசி ஆகிய இணையதளங்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

