ஊா்க்காவல் படையில் 50 திருநங்கைகளுக்கு பணி நியமனம்
தமிழ்நாடு ஊா்க்காவல் படையில் 50 திருநங்கைகளைச் சோ்ப்பதற்கான பணி நியமன ஆணைகளை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
திருநங்கையருக்கு உரிய விழிப்புணா்வையும், வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பையும் வழங்கும் வகையில், 2025-2026-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் இதற்கான அறிவிப்பை வெளியிட்டாா்.
முன்னோடி முயற்சியாக முதல்கட்டமாக 50 திருநங்கைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தற்போது பணியில் சோ்க்கப்பட்டுள்ளனா். சென்னையில் 5 போ், தாம்பரத்தில் 15, ஆவடியில் 10, மதுரையில் 7, கோயம்புத்தூரில் 7, திருச்சியில் 6 போ் பணியமா்த்தப்படுவாா்கள்.
காவல் துறையுடன் இணைந்து போக்குவரத்து மேலாண்மை, திருவிழாக் காலங்களில் கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் உரிய பயிற்சிகள் இவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
