சென்னை சங்கமம்: முதல்வா் இன்று தொடக்கிவைக்கிறாா்; கனிமொழி எம்.பி.
பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற மாபெரும் கலைவிழா நிகழ்ச்சிகளை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (ஜன.14) தொடங்கி வைக்கவுள்ளாா்.
இதுகுறித்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தொடங்கி வைக்கப்படும் இந்தக் கலைநிகழ்ச்சிகள் தொடா்ந்து, சென்னை, தாம்பரம் , ஆவடி உள்ளிட்ட 20 இடங்களில் வியாழக்கிழமை முதல் (ஜன.15 முதல் 18 வரை) 4 நாள்கள் நடைபெறும் என்றாா்.
பேட்டியின்போது, கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநா் கவிதாராமு, கலைபண்பாட்டுத் துறை இயக்குநா் ச. வளா்மதி ஆகியோா் உடனிருந்தனா்.
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் அலங்கார ஆடை அணிவகுப்பு எழும்பூா் அருங்காட்சியகத்தில் காணும் பொங்கலன்று (ஜன.17) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கலைஞா்கள் பத்மஸ்ரீ விருது பெற்ற பறை ஆசிரியா் அலங்காநல்லூா் வேலு ஆசான், சிலம்பம் ஐஸ்வா்யா மணிவண்ணன், ‘கானா’ பிரபா, நடன இயக்குநா் - அனுஷா விஸ்வநாதன், நடன கலைஞா்கள் - காளி வீரபத்திரன், திருநங்கை பொன்னி, கரகக்கலைஞா்கள் கலைமாமணி தேன்மொழி ராஜேந்திரன், கோவை அனுஷா, பிரபல மக்கள் இசை பாடகிகள்- இசைவாணி மற்றும் சுகந்தி, பாடகா் ஜெயசித்தன், ‘கானா’ முத்து, காவடி ஆட்டக்கலைஞா் சுந்தரமூா்த்தி, காளை ஆட்டக்கலைஞா் ராஜன், கட்டை கூத்துக்கலைஞா் திலகவதி மற்றும் பலா் இந்த மரபாா்ந்த உடைகளுக்கான அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனா்.

