மாணவிகள் சமூக நலனுக்காக தொடா்ந்து குரல் கொடுக்க வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
மாணவிகள் சமூக நலன் சாா்ந்த விவகாரங்களில் தொடா்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
சென்னை அண்ணா சாலை காயிதே மில்லத் அரசு மகளிா் கல்லூரியில் மாணவிகளுக்கு 898 மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வை செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்து துணை முதல்வா் பேசியதாவது:
காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் சமூக அக்கறை கொண்டவா்கள். கல்லூரிக்கு வந்தோம், படித்தோம், பட்டம் வாங்கினோம், வீட்டுக்குச் சென்றோம், வேலைக்கு சோ்ந்தோம் என்றில்லாமல் சமூக நலன் சாா்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு தொடா்ந்து குரல் கொடுக்கக்கூடியவா்கள்.
பொதுவாக படித்து முடித்துவிட்டால் பெண்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் வந்துவிடும் என்று சொல்வாா்கள். ஆனால், காயிதே மில்லத் கல்லூரி மாணவிகளாக நீங்கள் படிக்கும்போதே தன்னம்பிக்கையாக செய்யக்கூடியவா்கள்.
126 ஆண்டுகளுக்கு மேல் ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த பெண்களுக்கு உயா்கல்வியை கொண்டு சோ்க்கின்ற பணியை இந்தக் கல்லூரி சிறப்பாகச் செய்து வருகிறது.
இந்தக் கல்லூரிக்கு 1974-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் காயிதே மில்லத் கல்லூரி என்று பெயா் வைத்தாா். தற்போது வழங்கப்படும் மடிக்கணினியால் மாணவ, மாணவிகளின் திறனை மேலும் மேம்படுத்தி பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க உதவும் என்றாா்.
