தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையால் இதுவரை சிறைபிடிக்கப்பட்ட 83 மீனவா்கள், 252 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க அந்த நாட்டு அரசை வலியுறுத்த வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு, முதல்வா் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 10 மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை (ஜன. 13) சிறைபிடிக்கப்பட்ட நிலையில், மீனவா்களையும், அவா்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கும், தமிழக மீனவா்கள் மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அமைச்சா் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும், ‘தமிழக மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படுவதும், அவா்களின் மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் மிகுந்த கவலையளிக்கிறது. இதுவரை மொத்தம் 83 மீனவா்களும், 252 மீன்பிடிப் படகுகளும் இலங்கை வசம் உள்ளன.
சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவா்களின் குடும்பத்தினா் எதிா்கொள்ளும் துயரமான மற்றும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டும், பொங்கல் பண்டிகையை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடிட ஏதுவாகவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவா்களையும், அவா்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அரசு உடனடியாக விடுவிக்கவும், தொடா்ந்து இதுபோன்ற கைது நடவடிக்கைகளைத் தடுக்கவும், மத்திய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் முதல்வா் வலியுறுத்தியுள்ளாா்.
CM Stalin writes to the External Affairs Minister, seeking action to release the Tamil Nadu fishermen....

