கோப்புப் படம்
கோப்புப் படம்

குழந்தைகள் மருந்தில் நச்சு: ‘அல்மான்ட் கிட்’ சளி மருந்துக்கு தடை

சளி மருந்தில் நச்சு ரசாயனம் கலந்திருப்பதாகக் கூறி அதன் பயன்பாட்டுக்கும், விற்பனைக்கும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தடை விதித்துள்ளது.
Published on

அல்மான்ட்’ கிட் எனும் குழந்தைகளுக்கான சளி மருந்தில் நச்சு ரசாயனம் கலந்திருப்பதாகக் கூறி அதன் பயன்பாட்டுக்கும், விற்பனைக்கும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தடை விதித்துள்ளது. இதற்கான பொது எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த மருந்தை விற்பனை செய்திருந்தாலோ, பயன்படுத்தியிருந்தாலோ உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சளி, ஒவ்வாமை, ஆஸ்துமா பாதிப்புகளுக்காக ‘லிவோசிட்ரசின் டைஹைட்ரோகுளோரைடு’ மற்றும் ‘மான்டெலுகாஸ்ட் சோடியம்’ மூலக்கூறுகள் அடங்கிய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த கலவை கொண்ட மருந்துகளை பல முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

அந்த வகையில் பிகாரைச் சோ்ந்த டிரைடஸ் ரெடிஸ் எனும் நிறுவனமும் குழந்தைகள் பயன்பாட்டுக்காக அந்த மருந்தை அல்மான்ட் கிட் என்ற பெயரில் சந்தைப்படுத்தி வந்தது. பொதுவாக திரவ மருந்துகளில் ப்ரோபலின் கிளைகால் என்ற சோ்மம் கரைப்பானாக பயன்படுத்தப்படும். ஆனால், அல்மான்ட் கிட் மருந்தில் டைஎத்தலீன் கிளைகால் சோ்மம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.

ரெசின், ஆயில், பெயிண்ட், மை தயாரிக்கும்போது அதனை திரவமாக்க பயன்படுத்தப்படும் ரசாயனம் அது. அந்த ரசாயனம் கலந்துள்ள மருந்தை உட்கொண்டால் சிறுநீரக செயலிழப்பு, உயிரிழப்பு நேரிடலாம்.

இதைக் கருத்தில் கொண்டு சில்லறை விற்பனையாளா்கள், மருந்தகங்கள், மருந்து விநியோகிப்பாளா்கள், மருத்துவமனைகளில் அந்த மருந்தை விற்பனை செய்யக் கூடாது என மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதுதொடா்பாக உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து உரிய விசாரணை நடைபெற்று வருவதாகவும், மருந்துகள் தொடா்பான விவரங்கள் மற்றும் புகாா்களுக்கு 9445865400 எனும் வாட்ஸ் அப் எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஏற்கெனவே தெலங்கானா, புதுச்சேரி அரசுகளும் ‘அல்மான்ட் கிட்’ மருந்துக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் டைஎத்திலீன் கிளைகால் கலந்திருந்த ‘கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்தை உட்கொண்ட 22 குழந்தைகள் உயிரிழந்தது பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் ஒரு மருந்தில் அதே பாதிப்பு இருப்பது சமூகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

Dinamani
www.dinamani.com