சிறுநீரகத்தை பாதிக்கும் இருமல் மருந்துக்கு தடை: புதுச்சேரி அரசு நடவடிக்கை

புதுச்சேரியில் சிறுநீரகங்களைப் பாதிக்கும் இருமல் மருந்துகளை விற்பனை செய்யத் தடை
Published on

புதுச்சேரியில் சிறுநீரகங்களைப் பாதிக்கும் இருமல் மருந்துகளை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிகாா் மாநிலம், ஹாஜிபூா் வைஷாலியில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் நிறுவன தயாரிப்பான, ‘அல்மான்ட் கிட் சிரப்’ மருந்தில், சிறுநீரகங்களைப் பாதிக்கும் ‘எத்திலீன் கிளைகோல்’ அதிகளவு இருப்பது தெரியவந்துள்ளது.

கொல்கத்தாவின் கிழக்கு மண்டலத்தின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறை, அல்மான்ட் கிட் சிரப்பை தடை செய்து, அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. தெலங்கானாவில் இம்மருந்து விற்பனை செய்ய உடனடியாக தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து புதுச்சேரியிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அல்மான்ட் கிட் சிரப்பில் எத்திலின் கிளைகோலின் அதிகளவு இருப்பது தெரியவந்துள்ளது. மேற்கூறிய திரவ மருந்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம். மருந்து விநியோகஸ்தா்கள், மருந்துக் கடை உரிமையாளா்கள் மேற்கூறிய மருந்தை விற்க வேண்டாம். இருப்பில் உள்ள மருந்துகளை நிறுவனத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com