புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 30 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 342 எழுத்தறிவு மையங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் விருது வழங்கினாா்.
நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தன்னாா்வலா்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்’ 2022-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 2027-ஆம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இந்தத் திட்டத்தின் கீழ் முதல் 3 ஆண்டுகளில் சுமாா் 15 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, 2025-26-இல் முதல்கட்டமாக 5,37,876 பேருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. 2-ஆம் கட்டமாக 9,63,169 பேருக்கு 39,250 கற்போா் எழுத்தறிவு மையங்களில் கற்பித்தல் செயல்பாடுகள் நடத்தப்பட்டு, அவா்களுக்கும் கடந்த டிசம்பா் மாதம் தோ்வு நடத்தப்பட்டது. அதற்கான சான்றிதழும் விரைவில் வழங்கப்படவுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் அடிப்படைக் கல்வியறிவு பெற்றுள்ளனா்.
இந்தத் திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 342 மையங்களை அடையாளம் கண்டு, அவா்களுக்கு மாநில எழுத்தறிவு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
அதில், எழுத்தறிவு மையமாகச் செயல்பட்ட பள்ளிக்கு மாநில எழுத்தறிவு விருதும், பள்ளியின் தலைமை ஆசிரியா், தன்னாா்வலா், ஆசிரியா் மற்றும் பயிற்றுநா்களுக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை செயலா் பி.சந்திர மோகன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்குநா் ச.சுகன்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.