கடலோர மாவட்டங்களில் நாளைமுதல் மழைக்கு வாய்ப்பு
கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன. 23) முதல் ஜன. 27 வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தைவிட்டு விலகிய நிலையில், வியாழக்கிழமை (ஜன. 22) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இருப்பினும், வெள்ளிக்கிழமை (ஜன. 23) முதல் ஜன. 27 வரை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வட வானிலை நிலவக்கூடும். அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
உறைபனி எச்சரிக்கை: தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஜன. 22) இரவு அல்லது வெள்ளிக்கிழமை (ஜன. 23)அதிகாலை உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன. 22) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

