

தமிழ், தமிழர்கள், தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக என தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார்.
கூட்டத்தில் பாஜக தலைவர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழகத்திற்கு மத்திய பாஜக அரசு செய்தவற்றை பட்டியலிட்டார்.
அவர் பேசுகையில்,
"தமிழ்நாட்டில் தாய், தந்தையர்கள் எல்லாம் தங்கள் கண்முன்னே தங்களுடைய குழந்தைகள் நாசமாகிப் போவதைப் பார்த்து துடித்துக்கொண்டிருக்கிறார்கள். நம் இளைஞர்களை போதைப்பொருள் அபாயத்தில் இருந்து மீட்டே ஆக வேண்டும். என்டிஏ கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டை போதைப்பொருளில் இருந்து மீட்டெடுக்க உதவும் வாக்காக இருக்கும். திமுக ஆட்சியில் போதைப்பொருள், மதுபான குற்றவாளிகள் நன்றாக செழிப்பாக இருக்கிறார்கள் என்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்கள் நலனில் கண்ணும்கருத்தாக இருக்கிறது. இளைஞர்களை போதைக் கும்பலிடம் ஒப்படைத்துவிட்டது திமுக. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் நலனே முக்கியம்.
மருந்துகள் மற்றும் மருத்துவத் தயாரிப்பு சூழல் கொண்டுவர என்டிஏ ஊக்கமளிக்கும். இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் நலனே முக்கியம்
முத்ரா திட்டத்தால் இங்குள்ள இளைஞர்கள், முதியோருக்கு மக்களுக்கு ஆதாயம் கிடைக்கிறது. இதுவரை இங்கு 6 கோடி கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 3 லட்சம் கோடிக்கும் அதிகமான உதவிகள் தொழில் முனைவோருக்கு கிடைத்துள்ளது.
மத்திய அரசுடன் இசைவுடன் செயல்படும் அரசு இங்கு எப்போது அமையுமோ அப்போதுதான் தொழில் முதலீடுகள் சிறப்பாக இருக்கும்.
தமிழ்நாட்டில் குற்றங்களால் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் குற்றங்களை கட்டுக்குள் வைத்திருந்தார். பெண்களே, என்டிஏ அரசை ஏற்படுத்தித் தாருங்கள், இந்த அரசு உங்களுக்கு பாதுகாப்பைத் தரும்.
தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் குழாய் மூலமாக குடிநீர் கிடைக்கும், இது மோடியின் உத்தரவாதம்.
தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை நேசிக்கிறேன். அது எனக்கு எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதி பெயரில் இருக்கை அமைத்திருக்கிறோம். காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியால் நாட்டின் கலாசார ஒற்றுமை பலப்பட்டிருக்கிறது. காசியில் உள்ள பிள்ளைகள் தமிழ் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சி.
நாங்கள் தமிழ் கலாசாரத்துக்காக வெறும் வாய்பந்தல் போடுபவர்கள் அல்ல. அதனைப் பாதுக்காக உறுதிப்பாட்டை எடுத்து செயல்படுத்தி வருகிறோம்.
சில நாள்கள் முன்புதான் முருகப் பெருமானுக்கு விளக்கு போடுவது விவாதப்பொருளாகியுள்ளது. திமுக வாக்குவங்கியை குஷிப்படுத்த நீதிமன்றம் சென்றது.
நமது முருகப்பெருமானுக்கு விளக்கு போடுவது விவாதப் பொருளாக்கப்பட்டபோது, அப்போது நம் தலைவர்கள் எல்லாம் பக்தர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்தார்கள். அவர்களுக்கு கரவொலி அளியுங்கள்.
திமுகவும் அவர்களின் கூட்டாளிகளும் வாக்கு வங்கியை குஷிப்படுத்த நீதிமன்றங்களைக்கூட விட்டுவைக்கவில்லை. அவர்களையும் அவமானப்படுத்தினார்கள் .
தமிழ், தமிழர்கள், தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக.
காங்கிரஸ், திமுகவினர்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உங்களை அவமானப்படுத்தினார்கள். ஆனால் என்டிஏ அரசு, சட்டரீதியாக ஆராய்ந்து உங்களுடைய பாரம்பரியத்தை மீட்டுத் தந்தார்கள், கௌரவப்படுத்தினார்கள். தமிழக மக்கள் அனைவரும் தங்கள் பாரம்பரியத்தை கொண்டாடி மகிழ வேண்டும். இதற்கு என்டிஏ அரசு உங்களுக்கு துணை நிற்கும்.
தமிழகத்தில் திறமைகள் ஏராளம் இருக்கின்றன. திறமைகளுக்கு குறை இல்லை. இப்போது எப்படிப்பட்ட அரசு தேவை என்றால் இங்கே இருக்கும் இளைஞர்கள் மீது அரசு நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த அரசாங்கம் மத்திய அரசோடு இணைந்து கரம் கோர்த்து பயணிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்ததாக மாற்றுவோம்" என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.