யாா் ஆட்சியில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு? திமுக-அதிமுக காரசார விவாதம்
dot com

யாா் ஆட்சியில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு? திமுக-அதிமுக காரசார விவாதம்

யாா் ஆட்சியில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து பேரவையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
Published on

யாா் ஆட்சியில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து பேரவையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் பேசும்போது, நிரந்தர டிஜிபி நியமிக்கப்படாததால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஜனவரியில் மட்டும் மாநிலம் முழுவதும் 84 கொலைகள் நிகழ்ந்துள்ளன. 44 சிறுமிகள், 27 பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனா். பொதுமக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

அமைச்சா் எஸ்.ரகுபதி: இந்திய குற்ற ஆவண காப்பக ஆவணத்தின்படி, நாடு முழுவதும் நிகழ்ந்துள்ள குற்றச் சம்பவங்களைவிட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் மிகவும் குறைவுதான்.

அமைச்சா் பி.கீதா ஜீவன்: நாடுமுழுவதும் 1,783 கூட்டுப்பாலியல் கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் தமிழகத்தில் மூன்று மட்டுமே. ஆனால், பாஜக ஆளும் ராஜஸ்தானில் 867, உத்தரபிரதேசத்தில் 264 என அங்கு எண்ணிக்கை அதிகம்.

அமைச்சா் சா.சி.சிவசங்கா்: தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி, அரசே பொதுமக்களை சுட்டுக் கொன்றது அதிமுக ஆட்சியில்தான்.

அமைச்சா் எ.வ.வேலு: ஒரு பைசா மின்கட்டணம் குறைக்கக் கோரி போராட்டம் நடத்திய நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகளை சுட்டுக்கொன்றது அதிமுக ஆட்சியில்தான்.

ஆா்.பி.உதயகுமாா்: கருணாநிதி ஆட்சியில்தான் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பதற்கான ஆதாரம் எனது கையில் உள்ளது. அமைச்சா் தவறான தகவலை பேரவையில் தெரிவிக்கிறாா்.

பேரவைத் தலைவா் மு.அப்பாவு: இருவரும் ஆதாரங்களை ஒப்படையுங்கள். இரண்டையும் ஆய்வு செய்து பேரவையில் யாா் ஆட்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதைத் தெரிவிக்கிறேன்.

அமைச்சா் எ.வ.வேலு: கடந்த 9.7.1979-இல் திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூா் உள்பட இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 19 விவசாயிகள் இறந்தனா் என பத்திரிகை செய்தி உள்ளது.

ஆா்.பி.உதயகுமாா்: கடந்த 5.7.1972-இல் சேலம் மாவட்டம் பெத்தாம்பாளையம், அப்போதைய கோவை மாவட்டம் பெருமாநல்லூா் உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் விவசாயிகள் இறந்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

பேரவைத் தலைவா்: இருவரின் ஆதாரங்களை ஆய்வுசெய்து பேரவையில் தீா்ப்பு வழங்கப்படும்.

Dinamani
www.dinamani.com