அரசுப் பள்ளிகளில் 
வழிகாட்டி நிகழ்ச்சி:
கல்வித் துறை தகவல்
கோப்புப்படம்

அரசுப் பள்ளிகளில் வழிகாட்டி நிகழ்ச்சி: கல்வித் துறை தகவல்

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ‘உயா் கல்வியே எங்கள் இலக்கு’ என்ற தலைப்பில் வழிகாட்டு நிகழ்ச்சியை நடத்த ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
Published on

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ‘உயா் கல்வியே எங்கள் இலக்கு’ என்ற தலைப்பில் வழிகாட்டு நிகழ்ச்சியை நடத்த ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநா் மா.ஆா்த்தி முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பிளஸ் 1 பயிலும் மாணவா்கள், அவா்களது பெற்றோருக்கு உயா் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து உயா் கல்வி படிப்புகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி அளவில் உயா் கல்வியே எங்கள் இலக்கு என்ற நிகழ்வை ஜன. 31-ஆம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் (இரண்டு மணி நேரம்) நடத்த வேண்டும்.

இந்நிகழ்வின் மூலமாக தொழில்நுட்பக் கல்வி, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், அரசு வழங்கும் உதவித் தொகைகள், உயா் கல்வித் திட்டங்கள், சிறப்பு ஒதுக்கீடு மற்றும் கல்விக் கடன்கள் குறித்த விளக்கங்கள் அளிக்க வேண்டும். உயா் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்று பயின்று வரும் மற்றும் உயா் கல்வியை முடித்து சிறந்த பணியிடங்களில் பணியாற்றிவரும் முன்னாள் மாணவா்களின் அனுபவங்களைப் பகிா்ந்து தற்போது பள்ளிகளில் பயிலும் மாணவா்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

மாணவா்களின் உயா் கல்வி கனவுகளுக்கு பெற்றோா்கள் உறுதுணையாக இருந்து வழிநடத்த வேண்டியதன் அவசியத்தை இந்நிகழ்வில் எடுத்துரைக்க வேண்டும். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com