

விழுப்புரம்: தைப்பூச விழாவையொட்டி, பொதுமக்கள் மற்றம் பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை பிப்ரவரி 1 முதல் 3-ஆம் தேதி வரை இயக்குகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டம், வடலூரில் நடைபெறும் தைப்பூசவிழாவில் திரளான பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்பவர்களின் வசதிக்காக முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
அதன்படி, பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 9.05 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - கடலூர் துறைமுக சந்திப்பு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (வண்டி எண் 06121), அதே நாளில் முற்பகல் 11.20 மணிக்கு கடலூர் துறைமுக சந்திப்பு ரயில் நிலையத்தை சென்றடையும்.
எதிர்வழித் தடத்தில் கடலூர் துறைமுக சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து பிப்ரவரி 1,2, 3 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.30 மணிக்குப் புறப்படும் கடலூர் துறைமுக சந்திப்பு -விருத்தாசலம் முன்பதிவில்லாத சிறப்புரயில் (வண்டி எண் 06122) பிற்பகல் 1 மணிக்கு விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு வந்தடையும்.
விருத்தாசலத்திலிருந்து: விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து பிப்ரவரி 1,2,3 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1.20 மணிக்குப் புறப்படும் விருத்தாசலம் - கடலூர் துறைமுக சந்திப்பு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் ( வண்டி எண் 06123), அதே நாளில் பிற்பகல் 2.40 மணிக்கு கடலூர் துறைமுக சந்திப்பு ரயில் நிலையத்தை சென்றடையும்.
எதிர்வழித்தடத்தில் கடலூர் துறைமுக சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து பிப்ரவரி 1,2,3 தேதிகளில் பிற்பகல் 2.50 மணிக்குப் புறப்படும் கடலூர் துறைமுக சந்திப்பு - விழுப்புரம் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (வண்டி எண் 06124), அதே நாளில் மாலை 5.15 மணிக்கு விழுப்பும் ரயில் நிலையத்துக்கு வந்தடையும்.
இந்த ரயில்கள் விருத்தாசலம் உத்தங்கல்மங்கலம், நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். வண்டி எண் 06121 சிறப்பு ரயில் மட்டும் உத்தங்கல் மங்கலத்தில் நிற்காது. அனைத்து சிறப்பு ரயில்கள் 8 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.