எழும்பூரில் மேம்பாட்டுப் பணி: முக்கிய விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்
சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக எழும்பூா் மாா்க்கத்தில் இயக்கப்படும் முக்கிய விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் வரும் பிப். 3 முதல் ஏப். 4-ஆம் தேதி வரை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக வரும் பிப். 3 முதல் ஏப். 5-ஆம் தேதி வரை தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் உழவன் விரைவு ரயில் (எண்: 16866), கொல்லம் - சென்னை எழும்பூா் அனந்தபுரி அதிவிரைவு ரயில் (எண்: 20636), ராமேசுவரம் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (எண்:16752) ஆகியவை தாம்பரத்திலேயே நிறுத்தப்படும்.
அதேபோல், மறுமாா்க்கமாக பிப். 4 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை எழும்பூருக்குப் பதிலாக உழவன் விரைவு ரயில் (எண்: 16865) இரவு 11 மணிக்கும், கொல்லம் அனந்தபுரி அதிவிரைவு ரயில் (எண்: 20635) இரவு 8.20 மணிக்கும், ராமேசுவரம் விரைவு ரயில் (எண்: 16751) இரவு 9.05 மணிக்கும் தாம்பரம் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்.
சென்னை எழும்பூரிலிருந்து மும்பை செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 22158), வரும் பிப். 4 முதல் ஏப். 4-ஆம் தேதி வரை எழும்பூருக்குப் பதிலாக சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6.50 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.
மாற்றுப் பாதை: ஆமதாபாத் - திருச்சி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 09419/09420) பிப். 5 முதல் ஏப். 2 -ஆம் தேதி வரை இருமாா்க்கத்திலும் அரக்கோணம், பெரம்பூா், எழும்பூா் மற்றும் தாம்பரத்துக்குப் பதிலாக ரேணிகுண்டா, அரக்கோணம் வடக்கு, மேல்பாக்கம், காட்பாடி, வேலூா், விழுப்புரம் வழியாக இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

