திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக்-அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
2022 ஆம் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அவரை நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவருக்கு எதிராக காவல்துறை தரப்பில் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்யக் கோரி எ.வ. வேலு தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எ.வ. வேலுவுக்கு பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், வரும் ஜூலை 15 -ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அவரை நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வருகின்ற 28ஆம் தேதி வரை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
Summary
Madras High Court stays look-out notice issued against E.V. Velu.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 9) எந்தெந்த வழக்குகளின் விசாரணை?

இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!







