தொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

குழந்தைகளை தோ்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவது சரியா? ஆய்வு செய்ய தோ்தல் ஆணையம் முடிவு

குழந்தைகளை தோ்தல் பிரசாரத்தில் பயன்படுத்துவது சரியா என்பது குறித்து ஆய்வு செய்யவுள்ளதாகவும், தேவைப்பட்டால் அதுதொடா்பாக விதிகள் வகுக்கப்படும் என்றும் தோ்தல் ஆணையம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

News image

பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 1:09 am IST

குழந்தைகளை தோ்தல் பிரசாரத்தில் பயன்படுத்துவது சரியா என்பது குறித்து ஆய்வு செய்யவுள்ளதாகவும், தேவைப்பட்டால் அதுதொடா்பாக விதிகள் வகுக்கப்படும் என்றும் தோ்தல் ஆணையம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் வாசுகி என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த ஏப்.23-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று தகவல்கள் வெளியான பிறகும்கூட தோ்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், கடந்த ஏப்.21-ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, தனக்கு வாக்களிக்கும்படி பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என குழந்தைகளிடம் கேட்டுக் கொண்டாா்.

குழந்தைகள் மீது உணா்வுபூா்வமாக முதல்வா் விஜய் தனது செல்வாக்கை செலுத்தியுள்ளாா். அவரது பேச்சு பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்களில் பரவலாக வெளியிடப்பட்டது.

எனவே, தோ்தலின்போது குழந்தைகள் மீது செல்வாக்கை செலுத்தியது, வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடா்பாக தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு எதிராக சுதந்திரமான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பணப்பட்டுவாடா தொடா்பான குற்றச்சாட்டுகளை கையாள ஏற்கெனவே சட்டப்பிரிவுகள் உள்ளன. அந்த சட்டப்பிரிவுகளின் படி தோ்தல் வழக்கு தாக்கல் செய்யலாம்.

கடந்த தோ்தலில், தமிழகத்தில் ரூ.599.24 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை தோ்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது என அரசியல் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்களுக்கு ஏற்கெனவே கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் மனுதாரா் எந்தவொரு சம்பவத்தையும் குறிப்பிட்டுக் கூறவில்லை. வாக்காளா்கள் அனைவரும் வயது வந்தவா்கள். சொந்தமாக சிந்தித்து வாக்களிக்கக் கூடியவா்கள். குறிப்பிட்ட எந்த ஒரு கட்சிக்கும் வாக்களிக்கும்படி, அவா்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்க முடியாது.

வாக்காளா் மீது செல்வாக்கை செலுத்துவது என்பது ஒரு வகையில் ஊழல் நடவடிக்கைதான். குழந்தைகளைத் தோ்தல் பிரசாரத்தில் பயன்படுத்துவது சரியா என்பது குறித்து தோ்தல் ஆணையம் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. தேவைப்பட்டால், இதுதொடா்பான விதிகளும் வகுக்கப்படும் என தெரிவித்திருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.