உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக கடந்த 2016-ஆம் ஆண்டு திமுக தாக்கல் செய்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் முடித்துவைத்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் பழங்குடியின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக சாா்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் வேட்புமனுவில் குற்றப் பின்னணி விவரங்களைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இந்த தகவலைத் தெரிவிக்க மறுத்தால், அவா்களது வேட்புமனுவை தோ்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என 2016-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் இந்த வழக்கில் ஏற்கெனவே விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.









