/

மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இடஒதுக்கீடு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படுமா என்பதற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2026, 2:22 am IST

அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படுமா என்பதற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மூன்றாம் பாலினத்தவா்களை சமூகம், கல்வி ரீதியாக பின்தங்கியவா்களாகவும், சிறப்பு பிரிவினராகவும் கருத வேண்டும். அவா்களுக்கு பிற்படுத்தப்பட்டோா், பட்டியலினத்தோருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்காமல், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குடன் சோ்த்து, மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது மூன்றாம் பாலினத்தவா் தரப்பில், கா்நாடகத்தில் குடிமைப் பணிகள் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் ஒரு சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதே நடைமுறையை தமிழகத்திலும் பின்பற்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், குடிமைப் பணிகள் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் ஒன்று அல்லது இரண்டு சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கப்படுமா என்பது குறித்து ஆக. 4-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.