/

கரூர் சம்பவத்துக்கு அழாத தவெகவினர் சினிமாவைப் பார்த்து அழுகின்றனர்: திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி

கரூர் சம்பவத்தைப் பார்த்து அழாத தவெகவினர் சினிமாவை பார்த்து அழுகின்றனர் என்று திமுக முன்னாள் சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

News image

திமுக முன்னாள் சட்ட அமைச்சர் ரகுபதி.

Updated On :25 ஜூலை 2026, 5:45 pm IST

கரூர் சம்பவத்தைப் பார்த்து அழாத தவெகவினர் சினிமாவைப் பார்த்து அழுகின்றனர் என்று திமுக முன்னாள் சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை, திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் சிறைக்குச் சென்று மார்க்கண்டேயனைச் சந்தித்து நலம் விசாரித்திருந்த நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் ரகுபதியும் சிறைக்கு வந்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்தச் சந்திப்பு நீடித்தது.

வரும் ஜூலை 27-ஆம் தேதி மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அது தொடர்பாக இருவரும் தீவிர ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. ​சந்திப்பிற்குப் பிறகு பாளையங்கோட்டை சிறை வாசலில் செய்தியாளர்களைச் சந்தித்து ரகுபதி பேசியதாவது, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது 'எலும்பை முறித்து விடுவேன்' என்று கூறியது பேச்சுவாக்கில் வந்த வார்த்தை. அது குற்றமாகாது.

ஆனால், டிஎஸ்பி மூலம் நீதித் துறைக்கு அழுத்தம் கொடுத்து இந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கரூர் சம்பவத்தைப் பார்த்து யாரும் கண்ணீர் விடவில்லை . ஆனால் இன்று 'ஜன நாயகன்' படத்தைப் பார்த்துவிட்டு கண்ணீர் விடுகிறார்கள். நம்முடைய சட்டப்பேரவை தற்போது ஒரு திரைப்படக் கொட்டகையாக மாறியிருக்கிறது.

இது மக்களைக் காப்பாற்றும் அரசு அல்ல, சினிமா பார்க்கும் அரசு. முதல்வர் பேசும்போது சட்டப்பேரவைக் கதவுகளை மூட வேண்டும் என்று கூறுவது உரிமை மீறல் இல்லையா? கதவை மூடுவதற்கு யாருக்கு என்ன உரிமை உள்ளது? 'எலும்பை முறிப்பேன்' என்று சொன்னது மட்டும் குற்றமா, முதல்வர் கதவைச் சாத்தச் சொல்வது நியாயமா? எனக் கேள்வி எழுப்பினார்

தொடர்ந்து பேசிய ரகுபதி சபையில் சில குற்றச்சாட்டுகள் வைக்கப்படும்போது வெளிநடப்பு செய்ய சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் பேரவைத் தலைவர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறார். தனது கடைசி காலத்தில் கிடைத்திருக்கும் வாய்ப்பை அவர் இப்படிப் பயன்படுத்துகிறார்.

வெள்ளைக்காரன் ஆட்சியில் கூட பொதுமக்களுக்கு பேசுவதற்கு உரிமை இருந்தது. ஆனால், தற்போதைய விஜய் ஆட்சியில் பேசுவதற்கு உரிமை இல்லை. அரசை விமர்சனம் செய்தாலே வழக்கு போடும் நிலைதான் உள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்கள் சூறையாடும் ஆட்சியாக இது இருக்கிறது.

​மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட உள்ளதற்குக் காரணம், ஆட்சியாளர்கள் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாகச் செயல்படுவதுதான். தமிழ்நாட்டு மக்களைப் பற்றி சிந்திக்க யாருக்கும் நேரமில்லை. பாஜகவை எதிர்த்து உண்மையான அரசியல் செய்யும் ஒரே கட்சி திமுக மட்டும்தான். நாங்கள் எப்போதுமே கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடிக்க மாட்டோம் என்றார்.

​ மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ரகுபதி, "நீண்டநாட்களாகப் போராடி வரும் போராட்டக்காரர்களின் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி இது. அதனால்தான் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.

Summary

Former DMK Law Minister Regupathy stated that TVK members who did not cry over the Karur incident are crying watching a movie.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.