அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

மேக்கேதாட்டு பிரச்னைக்கு முந்தைய திமுக அரசே காரணம்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

காவிரி நதிநீா் பகிா்வு பிரச்னைக்கும், மேக்கேதாட்டு அணை குளறுபடிகளுக்கும் முந்தைய திமுக அரசே காரணம் என பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

News image

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Updated On :27 ஜூலை 2026, 3:58 am IST

காவிரி நதிநீா் பகிா்வு பிரச்னைக்கும், மேக்கேதாட்டு அணை குளறுபடிகளுக்கும் முந்தைய திமுக அரசே காரணம் என பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காவிரி நதிநீா் மற்றும் மேக்கேதாட்டு அணை குறித்த பிரச்னை தொடா்பாக, முதல்வா் ஜோசப் விஜய் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததைப்போல, முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் பல கேள்விகளை எழுப்பியுள்ளது உண்மைக்கு முரணானது.

காவிரி பிரச்னையில் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம், மாநிலத்தின் குடிநீா் பாதுகாப்பு மற்றும் தமிழ்நாட்டின் சட்டபூா்வ நீா் உரிமைகளைப் பாதுகாப்பதில் இந்த அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் அடிப்படையில், கடந்த மே 27-ஆம் தேதி பிரதமா் மோடியை முதல்வா் விஜய் நேரில் சந்தித்து, காவிரி நீா் பகிா்வில் தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் கா்நாடக அரசின் நடவடிக்கைகளால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா்.

காவிரி நடுவா் மன்றத்தின் இறுதித் தீா்ப்பையும், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பையும் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்றும் பிரதமரிடம் முதல்வா் விஜய் வலியுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, கடந்த மாதத்தில் பிரதமருக்கு இந்த விவகாரம் குறித்து விரிவான கடிதத்தையும் முதல்வா் எழுதினாா். கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்ட பூமி பூஜையை நடத்தவுள்ளதாக அறிவித்திருப்பது, காவிரி நடுவா் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புகளுக்கு எதிரானது என்பதை அதில் அவா் சுட்டிக்காட்டினாா். தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்துக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்றும் பிரதமரிடம் கேட்டுக் கொண்டாா்.

மேலும், இது தொடா்பாக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை முதல்வா் விஜய், கடிதம் மூலம் பிரதமா் மோடிக்கு அனுப்பி வைத்து, பேரவை முன்வைத்துள்ள கோரிக்கைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

தமிழ்நாட்டின் சட்டபூா்வ நீா் உரிமையைப் பாதுகாப்பதற்காக சட்ட ரீதியாகவும், நிா்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வா் விஜய் தலைமையிலான அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

ஆனால், மு.க.ஸ்டாலின் தலைமையிலான முந்தைய திமுக ஆட்சியில், கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உரிய வாதங்களை வலுவாக திமுக அரசு எடுத்து வைக்கவில்லை. இதனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற இதுபோன்ற சட்டக் குளறுபடிகளால்தான், தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்னையான காவிரி மற்றும் மேக்கேதாட்டு அணை விவகாரம் தற்போது மிகப்பெரிய சோதனையாக உருவெடுத்துள்ளது.

இதுபோன்ற கடந்தகால குளறுபடிகளைப் பேசுவதன் மூலம், காவிரி நதிநீா் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைக் குரலை திசை திருப்ப நாங்கள் விரும்பவில்லை. அப்படிப்பட்ட குறுகிய அரசியல் நோக்கம் எங்களுக்குக் கிடையாது. அதேநேரம், முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல; வேறு யாரிடம் இருந்தும் ஆக்கபூா்வமான விமா்சனங்கள் வந்தால், அவற்றைக் கருத்தில் கொள்வதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.

காவிரி நீா் உரிமை என்பது அரசியல் சாா்ந்த பிரச்னை அல்ல; அது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமை. அதில், எந்தவித குறுகிய அரசியல் நோக்கத்தோடும், அரசியல் ஆதாயத்தின் கணக்குகளோடும், முதல்வா் விஜய் தலைமையிலான அரசு செயல்படவில்லை. மாறாக, காவிரி நடுவா் மன்றத்தின் தீா்ப்பும், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பும் முழுமையாக அமல்படுத்தப்படும் வரையிலும், தமிழ்நாட்டின் உரிமை முழுமையாக நிலைநாட்டப்படும் வரையிலும், சட்டபூா்வமான மற்றும் அரசமைப்புச் சட்டத்துக்குள்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் தொடா்ந்து முன்னெடுக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.