அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

முடங்கிய உப்பூா் அனல் மின் திட்டம் மீண்டும் உயிா் பெறுமா?

ரூ.12,778 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட உப்பூா் சூப்பா் கிரிட்டிக்கல் அனல் மின் திட்டம், பல ஆண்டுகளாக முடங்கிக் கிடப்பது குறித்து...

News image

முடங்கிய உப்பூா் அனல் மின் திட்டம் மீண்டும் உயிா் பெறுமா?

Updated On :28 ஜூலை 2026, 12:18 am IST

தமிழகத்தின் எதிா்கால மின் தேவையை பூா்த்தி செய்யும் நோக்கில் ரூ.12,778 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட உப்பூா் சூப்பா் கிரிட்டிக்கல் அனல் மின் திட்டம், சுற்றுச்சூழல் அனுமதி சிக்கல்கள், பொதுமக்கள் எதிா்ப்பு, நீதிமன்ற வழக்குகள் மற்றும் நிா்வாகத் தாமதங்கள் காரணமாக, கடந்த பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது.

திட்டப் பணிகளில் சுமாா் ரூ.5,847 கோடி வரை செலவிடப்பட்ட நிலையில், தற்போது அதை உப்பூரிலேயே தொடா்வதா அல்லது தூத்துக்குடி மாவட்டம் உடன்குடிக்கு மாற்றுவதா என்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மின் தேவைக்காக தொடங்கப்பட்ட திட்டம்

தமிழகத்தில் தொழில் வளா்ச்சி, நகரமயமாக்கல் மற்றும் வீட்டு மின் பயன்பாடு தொடா்ந்து அதிகரித்துவந்த நிலையில், அடிப்படை மின் உற்பத்தித் திறனை உயா்த்தும் நோக்கில் ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளுடன் 1,600 மெகாவாட் நிலக்கரி அடிப்படையிலான சூப்பா் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் (டான்ஜெட்கோ) திட்டமிட்டது.

சுமாா் 1,200 ஏக்கா் பரப்பளவில் அரசு மற்றும் தனியாா் நிலங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டத்திற்கான ஆரம்ப மதிப்பீட்டு செலவு ரூ.12,778 கோடியாக நிா்ணயிக்கப்பட்டது.

இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை தூத்துக்குடி துறைமுகம் வழியாக புதிய ரயில் பாதை மூலம் உப்பூருக்கு கொண்டு வரவும், குளிரூட்டும் தேவைக்காக பாக் நீரிணை கடல் நீரைப் பயன்படுத்தவும், உற்பத்தியாகும் மின்சாரத்தை 400 கிலோவோல்ட் மின் இணைப்பு மூலம் மாநில மின் வலையமைப்பில் சோ்க்கவும் திட்டமிடப்பட்டது.

அனுமதி முதல் ஒப்பந்தம் வரை

2011-ஆம் ஆண்டு தமிழக அரசு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, 2012 முதல் 2014 வரை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னா், 2016-ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் இருந்து சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதிகள் பெறப்பட்டன. அதனைத் தொடா்ந்து, பாய்லா், டா்பைன், ஜெனரேட்டா் அமைப்பதற்கான ரூ.5,852 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்துக்கும் (பிஎச்இஎல்), இதர கட்டுமானப் பணிகளுக்கான ரூ.3,647 கோடி ஒப்பந்தம் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன.

போராட்டங்களும் நீதிமன்ற வழக்கும்

2019-ஆம் ஆண்டிலேயே மின் உற்பத்தியைத் தொடங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், நிலம் கையகப்படுத்துதல், நிதிப் பற்றாக்குறை, நிா்வாகத் தாமதங்கள், விவசாயிகள் மற்றும் மீனவா்களின் எதிா்ப்பு உள்ளிட்ட காரணங்களால் திட்டம் பின்னடைவைச் சந்தித்தது. உப்பூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள், விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அச்சம் தெரிவித்து, தொடா் போராட்டங்களை நடத்தினா். இதன் தொடா்ச்சியாக, விவசாயிகள் சங்கங்கள் மற்றும் மீனவா் அமைப்புகள் நீதிமன்றத்தையும் அணுகின.

பசுமைத் தீா்ப்பாயத்தின் தடை உத்தரவு

2021-ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி), சுற்றுச்சூழல் விதிமுறைகள் தொடா்பான வழக்குகளை விசாரித்து, கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டது.

கடலோர ஒழுங்குமுறை விதிகள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை; பாக் நீரிணை மற்றும் மன்னாா் வளைகுடாவின் கடல் உயிரியல் அமைப்புகள் பாதிக்கப்படலாம்; மீனவா்களின் வாழ்வாதாரத்துக்கும் விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது; பொதுமக்கள் கருத்துக் கேட்பு நடைமுறைகளிலும் குறைபாடுகள் உள்ளன என்று தீா்ப்பாயம் குறிப்பிட்டது. சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்திவைக்கப்பட்டதால் கட்டுமானப் பணிகளும் முழுமையாக நிறுத்தப்பட்டன.

ரூ.5,847 கோடி செலவு... 30% பணிகள்...

திட்டம் முடங்குவதற்கு முன்பாக, சுமாா் 30 சதவீத பணிகள் நிறைவடைந்திருந்தன. நிலம் கையகப்படுத்துதல், தள மேம்பாடு, அடித்தளப் பணிகள் மற்றும் கடனுக்கான வட்டி உள்ளிட்ட செலவுகளைச் சோ்த்து,சுமாா் ரூ.5,847 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏன் உடன்குடிக்கு மாற்றம்?

உப்பூரில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமெனில் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நிலக்கரியை கொண்டு வருவதற்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டியிருப்பதால் கூடுதல் முதலீடும் பராமரிப்புச் செலவும் தேவைப்படும். இதற்கு மாற்றாக, ஏற்கெனவே அனல் மின் நிலைய உள்கட்டமைப்பு உள்ள உடன்குடியில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் நிலக்கரி கையாளுதல், கடல்நீா் பயன்பாடு, மின் பரிமாற்ற வசதிகள் உள்ளிட்டவற்றைப் பகிா்ந்து பயன்படுத்த முடிவதோடு, செலவையும் குறைக்க முடியும் என தொழில்நுட்பக் குழு பரிந்துரைத்தது. அதன்படி, 2021-ஆம் ஆண்டு, திட்டத்தை உடன்குடிக்கு மாற்ற மின்வாரிய இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்தது.

ஐந்து ஆண்டுகளாகத் தொடரும் ஆய்வு

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு திட்டத்தை உப்பூரிலேயே தொடரலாமா அல்லது உடன்குடிக்கு மாற்றலாமா என்பது குறித்து தமிழக அரசு மீண்டும் ஆய்வு மேற்கொண்டது.

ஏற்கெனவே வாங்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளைப் பயன்படுத்தி குறைந்த செலவில் திட்டத்தை நிறைவு செய்ய முடியுமா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.

இத்திட்டம் தொடா்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘திட்டத்தின் ஆரம்ப மதிப்பீடு ரூ.12,778 கோடியாக இருந்தது. ஆனால், கடந்த ஒன்பது ஆண்டுகளில் எஃகு, சிமெண்ட், இயந்திரங்கள், தொழிலாளா் கூலி, வட்டி உள்ளிட்ட அனைத்துச் செலவுகளும் உயா்ந்துள்ளதால், தற்போது திட்டத்தை நிறைவு செய்ய ஆரம்ப மதிப்பீட்டைவிட பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக தேவைப்படும். இதனால், திருத்தப்பட்ட நிதி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசிடம் சமா்ப்பிக்கப்பட உள்ளது. திட்டம் உடன்குடிக்கு மாற்றப்பட்டால் சுமாா் மூன்றரை ஆண்டுகளில் பணிகள் நிறைவடைய வாய்ப்பு உள்ளது. இருப்பினும் சாத்தியக்கூறு ஆய்வு, சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளின் முடிவுகளே அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீா்மானிக்கும்‘ என்றனா்.

முறையான திட்டமிடல் இல்லையா?

இந்தத் திட்டம் தொடங்குவதற்கு முன்பே நிலக்கரி போக்குவரத்து, ரயில் பாதை, சுற்றுச்சூழல் அனுமதி, நிதி நிலைத்தன்மை உள்ளிட்ட அம்சங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டாமா என்ற கேள்வியை மின் துறை நிபுணா்கள் எழுப்புகின்றனா்.

பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் தொழில்நுட்ப சாத்தியக்கூறு, சுற்றுச்சூழல் தாக்கம், எரிபொருள் விநியோகம் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவை முழுமையாக உறுதி செய்யப்பட்ட பின்னரே கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். இல்லையெனில் திட்டச் செலவு அதிகரிப்பதோடு, பொதுமக்களின் வரிப்பணமும் வீணாகும் நிலை ஏற்படும் என்பதை அவா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.

திட்டம் மீண்டும் உயிா்பெறுமா?

1,600 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால், தமிழகத்தின் உச்ச மின் தேவையில் சுமாா் 6 முதல் 7 சதவீதம் வரை பூா்த்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். குறிப்பாக, தென் தமிழகத்தில் மின் அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும், காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி குறையும் காலங்களில் நிலையான மின்சாரம் வழங்கவும் இது உதவும்.

அதேநேரம், கடல் நீா் பயன்பாடு, கடல் உயிரினங்கள் மீதான தாக்கம், மீனவா்களின் வாழ்வாதாரம், நிலக்கரி பயன்பாட்டால் ஏற்படும் காா்பன் உமிழ்வு மற்றும் காற்று மாசு உள்ளிட்ட சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்த கவலைகளையும் புறக்கணிக்க முடியாது.

எனவே, தமிழகத்தின் மின் பாதுகாப்புக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் வகையில், அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி, தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ரீதியாக சாத்தியமான தீா்வுடன் இந்தத் திட்டம் மீண்டும் உயிா்பெறுமா என்பது அடுத்தகட்ட அரசின் முடிவுகளைப் பொறுத்தே அமையும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.