- சரோவர் ராஜா
தேனி மாவட்டத்தின் வருசநாட்டு மலைத்தொடர்களில் பிறந்து, மதுரையின் இதயப்பகுதியை ஊடறுத்து பாய்ந்து, சேதுச்சீமையைத் தழுவி வங்காள விரிகுடாவில் கலக்கும் வைகை ஆறு 250 கிலோமீட்டர் நீளமுடையது.
வைகை என்பது வெறும் நதி அல்ல; தமிழர்களின் வாழ்வியலோடும், பண்பாட்டோடும், இலக்கிய மரபோடும் பின்னிப் பிணைந்த ஒரு நாகரிக அடையாளம். அதனால்தான் சங்க காலப் புலவர்கள் பலர், வைகையின் அழகையும் வளத்தையும், அதன் கரையோர மக்களின் வாழ்க்கை முறையையும் தங்கள் பாடல்களில் விரிவாகப் பதிவு செய்துள்ளனர்.
பரிபாடலில் ஆற்றின் இயற்கை அழகு, வெள்ளப்பெருக்கு, கரையோர வாழ்க்கை மற்றும் மக்கள் நீராடி மகிழ்ந்த புனல் விளையாட்டு போன்ற நிகழ்வுகள் உயிரோட்டத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளன.
பரிபாடல் புலவர்களில் ஒருவரான கரும்பிள்ளைப் பூதனார், வைகை ஆற்றில் நடைபெற்ற நீராட்டு விழாக்களைப் பாடி அதன் சமூக, பண்பாட்டு முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக் காஞ்சி என்னும் பத்துப்பாட்டு நூல், பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையின் செழிப்பையும், அந்த நகரின் உயிர்நாடியாக விளங்கிய வைகை ஆற்றின் அழகையும் விரிவாக எடுத்துரைக்கிறது.
பரிபாடல், மதுரைக் காஞ்சி, புறநானூறு, அகநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் அனைத்திலும் வைகை ஆறு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. ஒரு நதியை வெறும் நீரோடையாக அல்லாமல், ஒரு சமூகத்தின் பண்பாடு, பொருளாதாரம், காதல், கொண்டாட்டம் மற்றும் நாகரிகத்தின் மையமாகக் கண்டு பாடியிருப்பது வைகைக்கு கிடைத்த மிகப் பெரிய இலக்கிய அங்கீகாரமாகும்.
வரலாற்றுப் பெருமையும் பண்பாட்டு அடையாளமும் கொண்ட வைகை ஆற்றை மீட்டெடுக்கும் நோக்கில், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்கவும், கழிவுநீர் நேரடியாக கலப்பதைத் தடுக்கவும், சுமார் ரூ. 275 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் மேலும் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் வைகை ஆற்றின் வடக்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளை உள்ளடக்கிய விரிவாக்கப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. நகரின் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன.
வைகை ஆற்றங்கரை மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில், வைகையை மீண்டும் மக்களின் வாழ்வோடு இணைக்கும் முயற்சிகளும் தொடங்கப்பட்டன. சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆற்றின் இருபுறங்களிலும் கரைப் பாதுகாப்புப் பணிகள், நடைபாதைகள் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், பொதுமக்கள் ஓய்வெடுக்கும் இடங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக தொடக்க கட்டமாக ரூ.79 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பல நூறு கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட நிலையிலும், வைகையின் தற்போதைய நிலை என்ன? ஆற்றை தூய்மைப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எந்த அளவிற்கு பலன் அளித்துள்ளன? வரலாற்றின் சுமையைத் தாங்கி ஓடும் வைகை, தனது இயற்கை அழகையும் தூய்மையையும் மீட்டெடுத்துள்ளதா? என்ற கேள்விகள் இன்னும் பதிலைத் தேடிக் கொண்டிருக்கின்றன.
வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பை நிரந்தரமாகத் தடுத்து, அதன் இயற்கைச் சூழலையும் நீர் தரத்தையும் மீட்டெடுக்கும் நோக்கில், அரசு பல்வேறு நீண்ட காலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சுமார் ரூ. 2,500 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு, முதல் கட்டப் பணிகளுக்காக ரூ. 450 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாமல், நகரின் கழிவுநீர் மேலாண்மை கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், பல்வேறு பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்களை நவீனமயமாக்கவும், அவற்றின் செயல்திறனை அதிகரிக்கவும் ரூ. 440 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நகரின் எந்தப் பகுதியிலிருந்தும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வைகையை அடையாத வகையில் முழுமையான கட்டமைப்பை உருவாக்குவதே இந்த முயற்சிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது.
வைகையில் கழிவுநீர் கலப்பதை முழுமையாகத் தடுத்து, ஒரு தூய்மையான, உயிரோட்டமிக்க நதியை மீண்டும் மக்களிடம் ஒப்படைப்பது. அந்த இலக்கு எந்த அளவுக்கு எட்டப்பட்டுள்ளது? வைகை தனது பழைய பொலிவை மீட்டெடுத்துள்ளதா?
நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், வைகை ஆற்றின் மாசுபாட்டை முழுமையாகக் கட்டுப்படுத்தும் இலக்கு இன்னும் எட்டப்படவில்லை என்பதே தற்போதைய நிலவரம் காட்டுகிறது.
வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவுகள், விவசாய நிலங்களிலிருந்து கலக்கும் ரசாயனக் கழிவுகள், திடக்கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் என பல்வேறு காரணிகள் ஆற்றின் இயல்பான ஓட்டத்தையும் தூய்மையையும் பாதித்து வருகின்றன. அதேபோல், மதச் சடங்குகளின் போது ஆற்றில் கொட்டப்படும் பொருள்கள், உயிரியியல் கழிவுகள், கட்டுப்பாடற்ற மணல் சுரண்டல், மருத்துவ மற்றும் மருந்துக் கழிவுகள், வெப்ப மாசுபாடு, மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்கள், அதிகப்படியான ஊட்டச்சத்து கலப்பு போன்ற நவீன சுற்றுச்சூழல் சவால்களும் வைகையின் ஆரோக்கியத்தை சீர்குலைத்து வருகின்றன.

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் பங்கேற்றோர். - டிஎன்எஸ்
கோடிகள் செலவழித்தும் ஏன் வைகை மாசுபாடு குறையவில்லை?
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் 2024 ஆம் ஆண்டு தரவுகள் வைகையின் நீரின் தரம் இன்னும் கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதை வெளிக்காட்டுகின்றன.
வீட்டு கழிவுநீர், வணிக நிறுவனங்களின் கழிவுகள், திடக்கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், விவசாய நிலங்களிலிருந்து கலக்கும் ரசாயனக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு மாசுபாட்டு மூலங்கள் ஒரே நேரத்தில் வைகையை பாதித்து வருகின்றன. இதனால், ஒரு புறம் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் பணிகள் நடந்தாலும், மறுபுறம் புதிய மாசுபாடுகள் தொடர்ந்து ஆற்றுக்குள் நுழைந்து கொண்டே இருக்கின்றன.
இதன் விளைவாக, காகிதங்களில் திட்டங்களும், கணக்குகளில் நிதி ஒதுக்கீடுகளும் உயர்ந்திருந்தாலும், களத்தில் வைகையின் நீரின் தரத்தில் எதிர்பார்த்த மாற்றம் இன்னும் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை. அதனால்தான், "திட்டங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல; அவற்றின் விளைவுகள்தான் முக்கியம்" என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழுந்து வருகிறது.
தரக்குறியீட்டில் மதுரை வைகை
வைகை ஆற்றின் மாசுபாடு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் உருவாகும் பிரச்னை அல்ல; ஆறு பாயும் பாதை முழுவதும் படிப்படியாக அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டின் வெளிப்பாடாகவே அது பார்க்கப்படுகிறது. மூல வைகை உருவாகும் வருசநாட்டுப் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக் குறியீட்டில் ஒரு நட்சத்திர அளவில் மட்டுமே பதிவாகும் வைகை, தனது பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் மாசுபாட்டின் சுமையைச் சுமந்தபடியே முன்னேறுகிறது.
கும்பக்கரை, ஆண்டிப்பட்டி பகுதிகளில் அந்த அளவீடு இரண்டு நட்சத்திரங்களாக உயர்கிறது. தொடர்ந்து தேனி, ஆண்டிப்பட்டி மற்றும் சோழவந்தான் பகுதிகளில் மூன்று நட்சத்திர அளவிலான மாசுபாடு பதிவாகிறது. ஆனால், வைகையின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்படுவது மதுரையில்தான். இங்கு வைகை, ஐந்து நட்சத்திர மாசுபாட்டுக் குறியீட்டை எட்டி, தனது பயணத்தின் மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை எதிர்கொள்கிறது.
மதுரையைத் தாண்டி செல்லும் வைகை, திருப்புவனத்தில் நான்கு நட்சத்திர மாசுபாட்டுடனும், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் பகுதிகளில் மூன்று நட்சத்திர மாசுபாட்டுடனும் தனது பயணத்தைத் தொடர்கிறது. இறுதியாக பாக் நீரிணையை அடையும் போது மீண்டும் நான்கு நட்சத்திர மாசுபாட்டுடன் கடலில் கலக்கிறது.
வைகையில் மரங்கள் நடும் பணி
தேசிய நீர்வழிப்பாதை இயக்கத்தின் நிறுவனர் பொறியாளர் மறைந்த ஏ.சி. காமராஜின் உதவியாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஸ்ரீதரன் கூறுகையில், மூல வைகை பகுதியில் உள்ள மேகமலை, வருசநாடு பகுதிகளில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு விட்டது. மரங்கள் இருந்தால்தான் மழை வரும். பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து மூல வைகையில் மரங்கள் நடும் பணியை தொடங்க வேண்டும்.
அரசு முணைப்பு காட்ட வேண்டும்
அது மட்டமல்லாது மூல வைகையில் இருந்து ராமநாதபுரம் வரை தடுப்பணைகள் கட்ட வேண்டும். தற்போது வைகையில் மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. அதே போல் வைகை அணை தூர் வாரப்படும் என புதிய அரசு அறிவித்துள்ளது. அணை தூர் வாரப்பட்டுவிட்டால் தண்ணீர் கொள்ளளவு அதிகரிக்கும். விவசாயம் மற்றும் குடீநீர் பற்றாக்குறை இருக்காது. வைகை அணையில் கலக்கும் கழிவு நீர், ரசாயன கழிவு நீர் என வைகையில் கலப்பதால் தண்ணீர் மாசு ஏற்படுகிறது. கழிவு நீர் கலப்பதை முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்றார்.
வைகை நதி மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், மதுரை வந்த ஆளுநர், வைகை ஆற்றின் அவலம் குறித்து பேசுவது அரசியலாக்கப்படுகிறது. இங்குள்ள அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் முன்வந்து வைகை நதியைப் பாதுகாக்க தவறியதால்தான் ஆளுநர் பேச வேண்டியுள்ளது.
வைகை நதி குறித்து கருத்து தெரிவித்த ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் எம்பி, வைகை நதி குறித்து எடுத்த முயற்சிகள், இதற்காக வழங்கிய நிதி ஆதாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
வைகை நதி தொடர்பாக முதல்வரை சந்தித்தது உண்டா?
கடந்த ஆட்சியில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போதுள்ள ஆட்சியிலும் பங்கேற்றுள்ளது. பல்வேறு அரசியல் குறித்து முதல்வரை சந்திக்கும் இவர்கள் வைகை நதியை தூய்மைப்படுத்துவது தொடர்பாக சந்தித்தது உண்டா? என கேள்வி எழுப்பினார்.
கள்ளழகர் எழுந்தரும் இடத்திலேயே கழிவு நீர்
கள்ளழகர் எழுந்தரும் இடத்திலேயே கழிவு நீர் கலக்கிறது. கழிவு நீர் கலப்பதை முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். அரசு நிர்வாகம் பொதுப்பணித் துறை, சுற்றுச்சூழல், மாநாகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் அனைத்து அலுவலக உயரதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தி வைகையை சுத்தம் செய்ய முன் வர வேண்டும் என்றார்.
Summary
Is the Vaigai being saved or wounded by the Tamil Nadu Governor's remarks?
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நதி நீர் பகிர்வு சிக்கலுக்கு நதி நீர் இணைப்பே தீர்வு என குடியரசு துணைத் தலைவர் கூறியிருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
ஆளுநா் பேச்சுக்கு மதுரை எம்.பி. கண்டனம்
வளைவு ஏரி

பசுமையான உலகம்-பாதுகாப்பான எதிர்காலம்!
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK




