தமிழ்நாட்டில் ஜூன் 10-க்குப் பின் வெய்யில் படிப்படியாகக் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஓரிரு மாதங்களாகத் தமிழகத்தில் அதிகப்படியான வெய்யில் சுட்டெரித்து வந்தது. அதீத வெய்யிலால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளானர்.
வெய்யிலின் முக்கிய மாதங்களாகக் கருதப்படும் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெய்யில் ஏப்ரல் 4 முதல் மே 28 வரை நிலவியது. சரி, கத்திரி வெய்யில் நிறைவடைந்துவிட்டது, இனியாவது வெய்யிலின் தாக்கம் குறையுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் நடக்கவில்லை. மே மாதத்தோடு ஜூன் மாதத்தில் வெய்யின் தாக்கம் உக்கிரமாகவே காணப்படுகிறது.
அதீத வெய்யிலால் குழந்தைகள், முதியோர்கள், வெளியில் வேலைக்குச் செல்பவர்கள், வாகன ஓட்டிகள், என வெப்பநிலையைச் சமாளிக்க முடியாமல் பெரும் அவதியடைந்தனர். கொளுத்தும் வெய்யிலால் வாந்தி, மயக்கம், வெப்ப பக்கவாதம் என வெப்ப நோய்களும் அதிகளவில் பாதித்தது.
இதனிடையே, தென்மேற்குப் பருவமழை கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தாண்டு அதுவும் தாமதமாகவே தொடங்கியுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடல், தென்மேற்கு-தென்கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் ஸ்ரீவிஜயபுரம் உள்பட அந்தமான்-நிகோபாா் தீவுப் பகுதிகளில் கடந்த மே 16ல் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது.
விவசாயிகளின் முதுகெலும்பாகக் கருதப்படும் தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு மே 26ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜூன் 4-ல் தாமதமாகவே தொடங்கியது.
இதனிடையே தமிழ்நாட்டில் இந்த வாரத்தில் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தாமதமானாலும், கிட்டத்தட்ட 90 சதவீத மழைப்பொழிவு பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்ன நல்ல செய்தி..
ஜூன் 08, 09 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
இருப்பினும், ஜூன் 10 முதல் 12 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாகக் குறையக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
பருவமழைத் தொடங்கவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் குறையும் எனப் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
The Meteorological Department has stated that the heat in Tamil Nadu will gradually decrease after June 10.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









