சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிகாற்று உருளையின்(சமையல் எரிவாயு சிலிண்டர்) விலையை இந்திய மத்திய அரசு 29 ரூபாய் அளவிற்கு அதிகரித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. எவ்வித முன்னறிவிப்புமின்றி எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தியுள்ளது ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கட்டுக்கடங்காது நாளுக்கு நாள் உயர்வதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் மக்கள் செய்வதறியாது தவித்து நிற்கையில், எரிகாற்று உருளை விலையையும் உயர்த்துவது, இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான குடும்பங்களின் குருதியை உறிஞ்சும் கொடுஞ்செயலாகும்.
மத்திய அரசின் கையிலிருந்த வாகன எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை தனியார் எரிஎண்ணெய் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் வகையில், கடந்த 2010ஆம் ஆண்டு சூன் மாதம் பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை காங்கிரசு அரசும், 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டீசல் விலை நிர்ணய உரிமையை பாஜக அரசும் மொத்தமாகக் கையளித்ததன் விளைவே தற்போது மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கு அடிப்படை காரணமாகும்.
1200 ரூபாய் அளவிற்கு விற்ற சமையல் எரிகாற்று உருளையின் விலை கடந்த நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டுதான் 1000 ரூபாய்க்கு கீழாக குறைக்கப்பட்டது. தற்போது அதனை மீண்டும் 1000 ரூபாய் அளவிற்கு உயர்த்தும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் மாதந்தோறும் பாதிக்கும் அறமற்றச் செயலாகும்.
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு எரிகாற்று உருளை விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும், எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் இந்திய இந்திய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
இத்தகைய நெருக்கடியானச் சூழலில் எரிகாற்று உருளை விலை உயர்வால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படாமல் காக்க, தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு, உடனடியாக தான் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து குடும்பங்களுக்கும் வருடத்திற்கு 6 எரிகாற்று உருளைக்கான செலவை முழுமையாக ஏற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Summary
The Central Government must immediately withdraw the cylinder price hike, urges Naam Tamilar Katchi coordinator Seeman.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










