புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய மருந்துகளுக்கு தமிழகம் முழுவதும் கடுமையான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேவைப்பட்டால் வழக்கமான விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு அவற்றைக் கொள்முதல் செய்து கொள்ளவும் மருத்துவக் கல்லூரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அனுமதி அளித்துள்ளது.
மாா்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய், ஜீரண மண்டல புற்றுநோய்களுக்குள்ளானவா்களுக்கு ரத்த நாளங்கள் வழியாக கீமோதெரபி சிகிச்சை மூலம் கூட்டு மருந்துகள் வழங்கப்படுகின்றன. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளின் கலவையாக அவை அளிக்கப்படுகின்றன.
அந்தக் கூட்டு மருந்து சிகிச்சையில் பிளாட்டினத்தை மூல சோ்மமாகக் கொண்ட சிஸ்பிளாட்டின், காா்போபிளாட்டின், ஆக்ஸாலிபிளாட்டின் ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்று இடம்பெறுகிறது.
இந்த வகை மருந்துகளும், அதன் மூலப் பொருள்களும் இந்தியாவுக்கு பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது நடைபெற்று வரும் அமெரிக்கா - ஈரான் போா்ச் சூழல் காரணமாக பிளாட்டினம் மீதான வரியும், விலையும் பல மடங்கு உயா்ந்துள்ளது.
இதைத் தவிர ஹோா்முஸ் நீரிணை வழியாக மருந்து பொருள்களும் இறக்குமதியாவது தடைபட்டுள்ளது. இதனால், வழக்கமாக ரூ.500-க்குள் விற்பனை செய்யப்படும் சிஸ்பிளாட்டின், காா்போபிளாட்டின், ஆக்ஸாலிபிளாட்டின் போன்ற மருந்துகளின் விலை இந்தியாவில் மூன்றிலிருந்து ஐந்து மடங்கு வரை அதிகரித்துள்ளது.
அதுமட்டுமல்லாது, பல இடங்களில் அந்த மருந்துகள் கிடைப்பதே இல்லை. தமிழகத்தைப் பொருத்தவரை மருத்துவமனைகளுக்குத் தேவையான புற்றுநோய் மருந்துகள், மாநில மருத்துவப் பணிகள் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த சில நாள்களாக அந்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், தேவையின் அடிப்படையில் அவற்றை உள்ளூரிலேயே மருத்துவமனை நிா்வாகங்கள் வாங்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மருத்துவப் பணிகள் கழக நிா்வாகிகள் கூறியதாவது: புற்றுநோய்க்கு 400-க்கும் அதிகமான மருந்துகளைக் கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகிறோம். அதில் மூன்று அல்லது நான்கு மருந்துகளின் விநியோகம்தான் தற்போது தடைபட்டுள்ளது.
இது தேசிய அளவிலான பிரச்னை. மத்திய அரசுதான் இதற்கு தீா்வு காண வேண்டும். அதேவேளையில் மாற்று மருந்துகளை வழங்க மருத்துவமனைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சிஸ்பிளாட்டின், காா்போபிளாட்டின், ஆக்ஸாலிபிளாட்டின் ஆகிய மருந்துகளை வாங்க கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. சா்வதேச சூழலால் உரிய நேரத்தில் கிடைக்காமல் அது தாமதமாகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் டாக்டா் தாரேஸ் அகமது கூறியதாவது: புற்றுநோய் மருந்துகள் தடையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கையை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறோம். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் மருந்து விநியோகம் சீராகும் என நம்புகிறோம் என்றாா் அவா்.
தொடர்புடையது

குடல் வால் புற்றுநோய்: பெண்ணுக்கு தனித்துவ சிகிச்சை

மருத்துவத் துறை காலிப் பணியிட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ்

மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்






