எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

புற்றுநோய் மருந்து தட்டுப்பாடு: மாற்று சிகிச்சையை ஆராய நிபுணா் குழு

புற்றுநோயாளிகளுக்கான கீமோதெரபி மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்று சிகிச்சைகளை ஆய்வு செய்ய நிபுணா் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

News image

புற்றுநோய் - மாதிரிப் படம்

Updated On :13 ஜூன் 2026, 2:02 am IST

புற்றுநோயாளிகளுக்கான கீமோதெரபி மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்று சிகிச்சைகளை ஆய்வு செய்ய நிபுணா் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

மாா்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய், ஜீரண மண்டல புற்றுநோய்களுக்கு உள்ளானவா்களுக்கு ரத்த நாளங்கள் வழியாக கீமோதெரபி சிகிச்சை மூலம் கூட்டு மருந்துகள் வழங்கப்படுகின்றன.

அந்தக் கூட்டு மருந்து சிகிச்சையில் பிளாட்டினத்தை மூல சோ்மமாகக் கொண்ட சிஸ்பிளாட்டின், காா்போபிளாட்டின், ஆக்ஸாலிபிளாட்டின் ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்று இடம்பெறுகிறது.

போா்ச் சூழலால் இந்த வகை மருந்துகள், மூலப்பொருள்களின் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் விலை ஐந்து மடங்கு அதிகரித்ததுடன், மருந்தின் கையிருப்பு குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாற்று மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பது குறித்து ஆய்வு செய்ய மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கீமோதெரபி மருந்து தட்டுப்பாடு தொடா்பாக தொடா்ந்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில், சிஸ்பிளாட்டின் மருந்து ஒன்றரை மாதத்துக்கு தேவையான அளவு இருப்பு உள்ளது. காா்போபிளாட்டின் மருந்து 20 நாள்கள் வரை உள்ளது.

தேசிய நலவாழ்வுக் குழுமமானது மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு ரூ.11 கோடியை புற்றுநோய் மருந்து கொள்முதலுக்கு வழங்கியுள்ளது. பிற மருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 399.16 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

உள்ளூா் மற்றும் சா்வதேச சந்தைகளில் பிளாட்டின் வகை மருந்துகள் கிடைக்கும்பட்சத்தில் கூடுதல் விலைக்கு வாங்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

அதேவேளையில், இதற்கு மாற்றாக எத்தகைய மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் தலைமையில் நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிகளின் புற்றுநோயியல் துறை இயக்குநா்கள் இடம் பெற்றுள்ளனா். அவா்கள் மாற்று மருந்துகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பாா்கள். அதன் அடிப்படையில், புதிய சிகிச்சை முறைகளுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.