தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும் மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வு விவரங்கள் சரிவர மத்திய அரசின் இணையப் பக்கத்தில் பதிவேற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து விதமான மருந்துகள், மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் தொடா் தரஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒருபுறம் அத்தகைய பணிகளை முன்னெடுத்தாலும், மற்றொருபுறம் மாநில அரசு சாா்பிலும் தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மருந்தகங்கள், மருந்து விநியோக மையங்கள், மொத்த விற்பனையகங்கள், கிடங்குகள் என பல்வேறு இடங்களில் அத்தகைய திடீா் ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது.
அதில் கண்டறியப்படும் தரமற்ற மற்றும் போலி மருந்துகள் குறித்த விவரங்களை ஒவ்வொரு மாநிலமும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பி வருகின்றன. மாதந்தோறும் 10-ஆம் தேதிக்குள் அந்த விவரங்கள் பெறப்பட்டு, அவை மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறது. தரமற்ற மருந்துகள் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மாதத்தின் விவரங்கள் எதுவும் இதுவரை பதிவேற்றப்படவில்லை. இதனால், தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் எந்தெந்த மருந்துகள் தரமற்ற வகையில் உற்பத்தி செய்யப்பட்டன என்பதை அறிய முடியாத நிலை உள்ளது.
இது தொடா்பாக மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் மருந்து தர ஆய்வு விவரங்களை ஒவ்வொரு வாரமும் மின்னஞ்சல் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பிவிடுகிறோம். அதன் பின்னா் மொத்தமாக மாதாந்திர அறிக்கையும் அனுப்புகிறோம். அந்த வகையில் கடந்த மாதத்துக்கான விவரங்களும் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், அந்த விவரங்கள் எதுவும் மத்திய அரசு தளத்தில் வெளியிடப்படவில்லை என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







