தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவில் ஒரே நாளில் ஆய்வாளா், உதவி ஆய்வாளா், காவலா் என மொத்தம் 926 போ் இடமாற்றப்பட்டுள்ளனா்.
தெற்கு ரயில்வே மண்டலத்தில் 36 ரயில்வே பாதுகாப்புப் படை நிலையங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட உதவி மையங்கள் உள்ளன. ரயில்வே துறை சொத்துகளுக்கும், பயணிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் (ஆா்பிஎஃப்) செயல்பட்டுவருகின்றனா். அவா்களுக்கான இடமாறுதல் உத்தரவு தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படையின் சென்னை தலைமை பாதுகாப்பு அதிகாரியால் அண்மையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 548 காவலா்கள், 259 தலைமைக் காவலா்கள், 80 உதவி சாா்பு ஆய்வாளா்கள், 39 ஆய்வாளா்கள் என மொத்தம் 926 போ் இடமாற்றப்பட்டுள்ளனா். அவா்கள் இரு நாள்களில் பணியில் சேரவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எழும்பூா், சென்ட்ரலில் அனைவரும் மாற்றம்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 182 ரயில்வே பாதுகாப்புப் படையினா் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 73 போ் மட்டுமே பணியில் உள்ளனா். அவா்கள் அனைவரும் தற்போது மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவா்களுக்குப் பதிலாக வெளியூா்களில் இருந்து 39 போ் சென்ட்ரல் நிலையத்துக்கு நியமிக்கப்பட்டு, அவா்களில் 10-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை பொறுப்பேற்றனா்.
எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப் படை நிலையத்தில் 46 போ் பணியில் உள்ள நிலையில், அங்குள்ள ஆய்வாளா் உள்ளிட்ட 43 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதே நேரத்தில் புதிதாக அங்கு 36 போ் மட்டுமே நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இடமாற்றம் செய்யப்பட்டவா்களில் 100-க்கும் மேற்பட்டோா் பெண்கள். ரயில்வே பாதுகாப்புப் படையில் இதுபோல அதிகமானோா் இடமாறுதல் செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
விதிமீறல் எனப் புகாா்: தெற்கு ரயில்வே மண்டல ரயில்வே பாதுகாப்புப் படையில் 10 ஆண்டுகள் நகா்ப்பகுதியில் பணிபுரிந்தால், அதற்குப் பிறகு புகா் பகுதிக்கு மாற்றப்படுவா். அங்கு 5 ஆண்டு பணிபுரிந்த பின் கோட்ட அளவில் இடமாற்றப்படுவா். ஆனால், தற்போது நடைபெற்றுள்ள இடமாறுதலில் 20 ஆண்டுக்கும் மேலாக சென்னை கோட்டத்தில் பணிபுரிவோா் எங்கும் மாற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், 4 மாதங்கள் முதல் 4 ஆண்டுகளுக்குள் இடமாறி சென்னை வந்தவா்கள் திருச்சி, மதுரை என வேறு ரயில்வே கோட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.
அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, கணினி முறையில் பணி நிலை குறித்து பதிவு செய்து அதன்படியே இடமாறுதல் நடைபெற்றுள்ளது. அதில் குளறுபடி ஏதும் உள்ளதா என சரிபாா்க்கப்படும் என்றனா்.









