தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் என சட்டப்பேரவை உரையில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் தெரிவித்தார்.
தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தொடங்கியுள்ளது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மாநில ஆளுநா் ஆர்.வி. ஆா்லேகர் உரையாற்றி வருகிறார்.
அவர் பேசுகையில்,
"தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அனுமதிக்கப்படாது. இரு மொழிக் கொள்கையே தொடரும். இரு மொழிக் கொள்கையே தமிழகத்தில் இதுவரை இருந்து வருகிறது. அது தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. தவெக அரசும் அதையே தொடர்ந்து பின்பற்றும். தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்புகளும் வலியுறுத்துகின்றன.
தேசிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்றதால்தான் கல்வி நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறி வருகிறது. மத்திய அரசு இதுகுறித்து மீண்டும் பரிசீலனை செய்து தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.
கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதனால் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
தமிழக கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசியர் பணியிடங்கள் நிரப்பப்படும். கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் வெளிப்படையான முறையில் விரைந்து நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
போதைப்பொருளை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு, மேக்கேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். லஞ்சத்தை ஒழிக்க தவெக அரசு தீவிரம் காட்டி வருகிறது" என்று பேசினார்.
Summary
Two-language policy will continue: Governor address in the Assembly
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






