தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டிற்கு முதற் காரணம் மாநிலத்தில் பரவலாகக் கிடைக்கும் போதைப் பொருள் புழக்கம்தான் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தொடங்கியுள்ளது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மாநில ஆளுநா் ஆர்.வி. ஆா்லேகர் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,
"கடந்த சில ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் போதைப் பொருள் கலாசாரம் வேரூன்றியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த முந்தைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் அரசு எதையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டிற்கு முதற் காரணம் மாநிலத்தில் பரவலாகக் கிடைக்கும் போதைப் பொருள் புழக்கம்தான். போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதில் இந்த அரசு முழு மூச்சுடன் செயல்படும்.
இதனைச் செயல்படுத்தும் விதமாக, போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் படையை அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்க இந்த அரசு உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது.
பொதுமக்களின் நலனில் பெரிதும் அக்கறை பொறுப்பேற்றவுடன் கொண்ட இந்த அரசு முதற்கட்டமாக, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் தொலைவில் அமைந்திருந்த 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
கள்ளச்சாராய நடமாட்டம் மற்றும் சட்டவிரோத மது விற்பனையை முற்றிலும் ஒழிப்பதற்கும், இத்துறையில் முழுமையான கண்காணிப்பை ஏற்படுத்துவதற்கும் தேவையான கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
இதன்மூலம், ஆயத்தீர்வை வசூல் மற்றும் மதுபான விநியோகத்தில் உள்ள முறைகேடுகள் தடுக்கப்பட்டு, மாநிலத்தின் சமூக-பொருளாதாரச் சூழல் நல்வழிப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
Summary
The circulation of narcotics is the reason for the breakdown of law and order in Tamil Nadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது






