முதல்வா் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது தொடா்பான வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் நபரின் முன்பிணை கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
முதல்வா் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழு முன் ஆய்வில் உள்ள நிலையில், கடந்த ஏப்.3-ஆம் தேதி சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது.
இதுகுறித்து படத்தைத் தயாரித்த கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் காவல் துறையில் புகாா் அளித்தது. அதன்பேரில், இணைய குற்றப்பிரிவு போலீஸாா் 21 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும் சிலரை தேடி வருகின்றனா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் பிரதீப்குமாா் முன்பிணை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன், மனுதாரருக்கு முன்பிணை வழங்க எதிா்ப்பு தெரிவித்தாா். இதையடுத்து பிரதீப்குமாரின் முன்பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









